காவிரி நீர் விவகாரம்: உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசு, காவிரி நீரைப் பெறுவதில் உச்சநீதிமன்றத்தை நாடி, சட்டநடவடிக்கை எடுப்பது காலம் தாழ்ந்த முடிவு என்றாலும் ஏற்கனவே ஓர் அமைச்சரவைக்குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி காவிரி நீரைப் பெற முயற்சித்திருக்க வேண்டும். தமிழக அரசு காலத்தே சட்டநடவடிக்கை உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றிருக்க வேண்டும்.

காவிரி நீர் சம்பந்தமாக தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்களின் இன்றையக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சட்டநடவடிக்கையின் மூலம் காவிரி நீரைப் பெற வேண்டும். கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றத்தை நாடித்தான் நீரைப் பெற்றோம் என்று தெரிவிக்கும் தமிழக அரசு காவிரி நீருக்காக கர்நாடக அரசிடம் நேரிடையாக சென்று முறையிட்டிருக்க வேண்டும்.

அதாவது கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் மூலம் காவிரி நீரைப் பெற்ற பிறகு தொடர்ந்து தமிழகத்துக்கு அளவீட்டின்படி திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட மறுத்தது. மேலும் தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றம் சென்று காவிரி நீரைப் பெற முயற்சிக்கிறீர்கள். கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் காலத்தே கிடைக்காத போது, ஓர் அமைச்சரவைக்குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி காவிரி நீரைப் பெற்றிருக்க வேண்டும்.

காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பொய்த்து, குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பிறகு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல இருப்பது காலம் தாழ்ந்தது என்றாலும் காவிரி நீர் சம்பந்தமாக கர்நாடகாவுக்கு ஓர் அமைச்சரவைக்குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரைப்பெற்றிருக்கலாம். எனவே தமிழக அரசே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக காலம் தாழ்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக உடனடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து தமிழக உரிமையை நிலைநாட்டி, விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை