காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரையினை கர்நாடக அரசு ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரையினை கர்நாடக அரசு ஏற்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ம் தேதி கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

ஆனால் 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தமிழகத்துக்கு தினமும் ஒரு டி எம் சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து தமிழகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற உச்ச நீதின்றத்தை நாட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ம் தேதி கூடுகிறது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 24-ம் தேதி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருப்பூரில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது..!!

9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்..!!