கால்நடைகளின் தீவனச்செலவை குறைக்கும் வழிகள்!

விவசாயத்தைப் பொருத்தவரை கால்நடை வளர்ப்பு முக்கியானது. வேளாண்மையுடன் இணைந்த உப தொழிலாக கால்நடை வளர்ப்பு இருக்கிறது. எனவேதான் விவசாயிகள் பசுக்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். என்னதான் பசு வளர்த்து பால் கறந்து விற்று பயன்பெற்றாலும், சில சமயம் பசுக்களின் மூலம் கிடைக்கும் வரவினை விட அதனை வளர்ப்பதற்கு தேவையான தீவனச்செலவு அதிகளவு ஆகிவிடும். இந்த காலத்திலும் பசுந்தீவனத்திற்கு அதிகளவில் செலவழிக்கும் விவசாயிகள் செலவினை குறைப்பது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறார்கள். அப்படி தெளிவில்லாமல் இருப்பவர்களுக்கும் இனி கால்நடைகளை வளர்க்கப்போகிறவர்களுக்கும் பயனுள்ள வகையிலும் தீவனச்செலவை குறைப்பது பற்றி சொல்லப் போகிறது இந்த செய்தி. கால்நடைகளின் பராமரிப்பில் 60-70 சதவீதம் தீவனச் செலவாக உள்ளது. இதை குறைப்பதற்கு உகந்த வழி தீவனப்பயிர்களை வளர்த்து அவைகளுக்கு உரிய அளவில் கொடுப்பதாகும்.

தீவனங்கள்

மக்காச்சோளம், சோளம், தீவனக்கம்பு ஆகிய தானிய வகைகளும், கினியாப்புல், எருமைப்புல், கொழுக்கட்டைப்புல் ஆகிய புல் வகைகளும்,முயல் மசால், வேலி மசால், தீவன தட்டைப்பயறு, ஆட்டு மசால், சங்குப்பூ ஆகிய பயறு வகைகளும், சூபாபுல், வாகை, வேம்பு, அகத்தி போன்றவற்றை எல்லா மண் வகைகளிலும் நிலத்தடிநீர் மற்றும் பாசனவசதி குறைவாக உள்ள இடங்களிலும் பயிரிடலாம். அதாவது இந்தத் தீவன மரங்களை வரப்பு களிலும், தோட்டங்களின் வேலி ஒரங்களிலும் பயிரிடலாம். அதேபோல தானிய வகை, புல் வகை, பயறுவகை தீவனப்பயிர்களை ஊடு பயிர் முறையில் பயிர்செய்வதன் மூலம் கால் நடைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

தீவனப் பராமரிப்பு

அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, அரிசிக் குருணை, உளுந்து, பயறு, கடலை பொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில் 50 சதவீதம் வரை சேர்க்கலாம். விலை மலிவாக கிடைக்கும் தானிய உபபொருள்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு மிச்சமாவதுடன் சத்துள்ள ஆகாரம் கிடைக்கிறது. வேளாண் கழிவுப் பொருள்களையும் அளிக்கலாம். கிழங்கு திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்க்கலாம்.அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், சோளத்தட்டை, கம்புத்தட்டை, வேர்க்கடலைக்கொடி, காய்ந்த புல், சூரியகாந்தி செடி, மக்காச்சோளத்தட்டை, கேழ்வரகுத் தட்டை ஆகிய கூளத் தீவனத்தையும் கொடுக்கலாம். சத்துகள் குறைந்த இந்த உலர் தீவனங்களை 4 யூரியா கரைசல் தெளித்து சில நாள்கள் காற்றுப் புகாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் சத்துள்ள கூளத் தீவனம் கால்நடைகளுக்கு கிடைக்கும். யூரியாவைக் கொண்டு ஊட்டமேற்றிய தீவனத்தை ஆறு மாத வயதைக் கடந்த மாட்டிற்கு 4-5 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு சோளத்தட்டையுடன் காய்ந்த உளுந்தஞ்செடி, துவரைச்செடி, நிலக்கடலைக் கொடி, மர இலைகள், கொடுக்காப்புளி, கருவேல் ஆகியன நல்ல உணவாகின்றன.

நல்ல உணவுகள்

கரும்புச்சோகை, சக்கைகளும் நல்ல உணவு. கரும்புச்சோகை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. தினசரி 20 முதல் 25 கிலோ வரை அளிக்கலாம். சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்திப் பூ ஆகியவற்றை உணவாக வைக்கலாம். கருவேல், வேலிக்கருவேல், சவுண்டல் விதைகள், புளியங்கொட்டை, மாங்கொட்டை ஆகியவற்றை தீவனமாகப் பயன்படுத்தலாம். விதைகளை 20 முதல் 30 சதவீதம் வரை தீவனத்தில் சேர்க்கலாம்.

மர இலைகள்

பெரும்பாலும் நமது கிராமங்களில் கிடைக்கும் மர இலைகள் சத்துள்ள தீவனமாக இருக்கிறது. அகத்தி, கொடுக்காப்புள்ளி, வாகை ஆகியவற்றின் இலைகளில் புரத சத்து அதிகமாக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் விச சத்து இல்லாத கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை கோடைகாலத்தில் அளித்து தீவனப்பற்றாக்குறையை போக்கலாம். மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகு தட்டை போன்றவற்றையும் கோதுமைத்தட்டையும் சேர்த்து அளிக்க வேண்டும். மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 3 முதல் 3.5 கிலோ வரை ஒரு நாளைக்கு கொடுக்கலாம்.

கவனிக்க வேண்டியது

மாலை, இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும். விஷ சத்துள்ள தீவனப் பயிர்களை கால்நடைகளுக்கு கொடுக்கக் கூடாது. தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக்கூடாது. இளம் சோளப்பயிரில் உள்ள சைனிக் அமிலம் நச்சுத்தன்மை உடையதால் இதனை உண்ணும் கால்நடை இறக்க நேரிடும். முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று தடவை பிரித்து சிறிது சிறிதாக அளித்தல் நல்லது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்