கால்நடைகளைக் காப்போம்!

விவசாயப் பயிர்களை நாம் கண்ணும் கருத்துமாக பார்த்து பராமரிப்பது போல நமது கால்நடைச் செல்வங்களையும் நோய் நொடியின்றி பாதுகாப்பது அவசியம். குறிப்பாக அவற்றுக்கு ஏதாவது நோய்தாக்கிய அறிகுறி தென்பட்டால் உடனே அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கால்நடைகளுக்கு சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையான அறிகுறிகளுடன் நோய் தோன்றினாலும் அவற்றின் உரிமையாளர் அல்லது பண்ணையின் பணியாளர் வேறு வேலை காரணமாக நோய்களின் அறிகுறிகளை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டு விட்டு நோய் முற்றிய பின் நோயைக் கண்டறிந்து கால்நடை மருத்துவரை நாடுகிற நிலை அடிக்கடி ஏற்படும். கால்நடைகளில் திடீரென்று கடுமையாகத் தோன்றிச் சீக்கிரத்தில் மரணத்தின் வாயிலில் கொண்டு நிறுத்தும் சில நோய்களைக் குறித்துக் கால்நடைகளை வளர்ப்போர் தெரிந்து கொள்வதன் மூலம் காலதாமதமின்றிக் கால்நடை மருத்துவரை அணுகி மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தமது கால்நடைகளின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

அதாவது சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற சில தொற்று நோய்கள் திடீரென்று கால்நடைகளைத் தாக்கி குறுகிய கால அளவில் இறப்பை ஏற்படுத்துகின்றன. நோய் பற்றி விசாரிக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட கால்நடை இனங்கள் நோயினால் பாதிக்கப்பட்டடிருப்பது தெரியவரும். இந்த நோய்களின் அறிகுறிகளைக் கொண்டு நோயை எளிதில் கண்டுபிடித்து விடலாம். கடுமையான காய்ச்சல் தொற்று நோய்களுக்கான முக்கியமான அறிகுறி. சப்பை நோயில் முன் சப்பை அல்லது பின் சப்பை தசைப்பகுதியில் நிறம் மாறிய கொர கொரவென்று உணரக்கூடிய வீக்கம் ஏற்படும். தொண்டை அடைப்பான் நோயில் வீக்கமானது தொண்டையில் ஏற்பட்டுக் கீழ் நோக்கிப் பரவும். வாயைத் திறந்துகொண்டு சத்தத்துடன் கால்நடைகள் மூச்சு விடுதல், வாயில் நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அடைப்பான் நோய் அறிகுறிகளின்றி வெகு குறுகிய காலத்தில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

மனிதர்களாகிய நாம் சாப்பிடும்போது எப்படி புரையேறுகிறதோ அதுபோல கால்நடைகள் உட்கொள்ளும் தீவனம் மற்றும் பொருட்கள் சுவாசக் குழாய்க்குள் செல்லும்பொழுது புரையேறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங்கள் திரவமாக உள்ள மருந்துகளை வாயில் ஊற்றும்பொழுது உணவுக் குழாய்க்குப் பதிலாகச் சுவாசக் குழாய்க்குள் ஏறிவிடுவால் ஏற்படுகின்றன. பழக்கமில்லாமல் அனுபவக் குறைவாக வாயில் மருந்தை ஊற்றுவதனாலோ, கூழ், கஞ்சி முதலியவற்றை வாயில் ஊட்டும் பொழுதோ, மருந்தை வாயில் ஊற்றும் பொழுது கால்நடைகளைத் துள்ளாமல் பிடிப்பதில் தவறினாலோ, தவிடு முதலிய திடப் பொருட்களை மூக்கிற்குள் இழுப்பதாலோ, ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு கால்நடைகள் பரபரப்புடன் தீனியை உட்கொள்ளும்பொழுதோ புரையேறுதல் ஏற்படலாம். இதுபோன்ற சமயத்தில் கவனமாக கையாள வேண்டும்.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை