கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்க சில யோசனைகள்!

விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கால்நடைகள் எப்போதும் பயனுள்ளதாக விளங்கும். இத்தகைய கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது சவாலானது. கால்நடைகளுக்கு முறையாக பசுந்தீவனங்களையும், அடர்தீவனங்களையும் வழங்காவிட்டால் அவற்றுக்கு போதிய சத்துகள் கிடைக்காது. நாம் சில எளிய வழிகளில் கால்நடைகளுக்கான தீவனங்களை உற்பத்தி செய்து, தீவனச்செலவைக் குறைக்கலாம். மக்காச்சோளம், சோளம், தீவனக்கம்பு ஆகிய தானிய வகைகளும், கினியாப்புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல் ஆகிய புல் வகைகளும், முயல் மசால், வேலி மசால், தீவன தட்டைப்பயறு, ஆட்டு மசால், சங்குப்பூ ஆகிய பயறு வகைகளும், சூபாபுல், கிளிரிசீடியா, வாகை, வேம்பு, அகத்தி போன்ற தானிய மற்றும் தீவனப் பயிர்களையும் விவசாயிகள் பயிரிட்டு கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

அனைத்து மண் வகைகளிலும், மழையளவு மற்றும் பாசன வசதி குறைவாக உள்ள இடங்களிலும் தீவன மரங்களை வரப்புகளில் வளர்க்கலாம். மேற்சொன்ன இடங்களில் தோட்டங்களின் வேலி ஓரங்களில் தீவனங்களைப் பயிரிடலாம். அதேபோல், தானிய வகை, புல் வகை, பயறு வகை தீவனப்பயிர்களை ஊடுபயிர் முறையில் பயிர் செய்வதன் மூலம் கால்நடைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வறட்சியின்போது தீவனப் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால், பெரும்பாலான கால்நடைகள் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில் உடைத்த சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச் சோளத்துக்குப் பதிலாக 50 சதவீதம் வரை தீவனத்தில் அளிக்கலாம்.அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, அரிசிக்குருணை, உளுந்து, பயறு, கடலைப் பொட்டு போன்றவற்றை கால்நடைத் தீவனத்தில் 50 சதவீதம் வரை சேர்க்கலாம். விலை மலிவாக கிடைக்கும் தானிய உபபொருட்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு மிச்சமாவதுடன் சத்துள்ள ஆகாரம் கிடைக்கிறது.

வேளாண் கழிவுப் பொருள்களையும் அளிக்கலாம். கிழங்கு திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்க்கலாம். அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், சோளத்தட்டை, கம்புத்தட்டை, வேர்க்கடலைக்கொடி, காய்ந்த புல், சூரியகாந்திச் செடி, மக்காச்சோளத்தட்டை, கேழ்வரகுத் தட்டை ஆகிய கூளத் தீவனத்தையும் கொடுக்கலாம்.சத்துகள் குறைந்த இந்த உலர் தீவனங்களை யூரியா கரைசல் தெளித்து சில நாட்கள் காற்றுப் புகாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் சத்துள்ள கூளத் தீவனம் கால்நடைகளுக்கு கிடைக்கும். யூரியாவைக் கொண்டு ஊட்டமேற்றிய தீவனத்தை 6 மாத வயதைக் கடந்த மாட்டிற்கு 4-5 கிலோ வரை அளிக்கலாம்.
ஆடுகளுக்கு சோளத்தட்டையுடன் காய்ந்த உளுந்தஞ்செடி, துவரைச் செடி, நிலக்கடலைக் கொடி, சவுண்டல், கிளிரிசிடியா, மர இலைகள், கொடுக்காப்புளி, கருவேல் ஆகியவை நல்ல உணவாக விளங்குகின்றன. காய்ந்த பயறுவகை தீவனங்களையும் அவை விரும்பி உட்கொள்ளும்.

கரும்புச் சோகை, சக்கைகளும் கால்நடைகளுக்கு நல்ல தீவனம்தான். கரும்புச்சோகையை தினசரி 20 – 25 கிலோ வரை அளிக்கலாம். சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்திப் பூ ஆகியவற்றையும் கொடுக்கலாம். கருவேல், வேலிக்கருவேல், சவுண்டல் விதைகள், புளியங்கொட்டை, மாங்கொட்டை ஆகியவற்றை தீவனமாகப் பயன்படுத்தலாம். விதைகளை 20 -30 சதவீதம் வரை தீவனத்தில் சேர்க்கலாம்.அதேபோல மர இலைகளும் சத்துள்ள தீவனம்தான். அகத்தி, சவுண்டல், கிளிரிசிடியா, கொடுக்காப்புளி, வாகை ஆகியவற்றின் இலைகளில் புரதச் சத்து அதிகமாக இருக்கும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் நச்சுத்தன்மை அற்ற, கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை கோடை காலத்தில் அளித்து தீவனப்பற்றாக்குறையைப் போக்கலாம். மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகு தட்டை போன்றவற்றையும், கோதுமைத்தட்டையும் சேர்த்து அளிக்கலாம். மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10-15 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 3 – 3.5 கிலோ வரை ஒரு நாளைக்கு கொடுக்கலாம். மேலும் மர இலைகளையும் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

மர இலைகளைப் பிற புல், உலர்ந்த தீவனத்துடன் சிறிது சிறிதாக அளிக்க வேண்டும். மர இலைகளை உலரவைத்து அதன் ஈரப்பதம் 15 -20 கீழே உள்ள நிலைகளில் அளிப்பது சிறந்தது. மர இலைகள் மீது உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளித்தால் உண்ணும் திறன் அதிகமாகும். மர இலைகளை விரும்பி உண்ணாத கால்நடைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளின் அருகில் கட்டி வைத்து மர இலைகளை தீவனமாக அளிக்கலாம்.மாலை, இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும். நச்சத்தன்மை உள்ள தீவனப் பயிர்களை கால்நடைகளுக்கு கொடுக்கக் கூடாது. தீவனத் தட்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக் கூடாது.

 

Related posts

செப் 18: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு