கால்நடைகளைத் தாக்கும் வெறிநோய்!

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களில் மிகவும் கொடியது வெறிநோய். இந்நோயின் பாதிப்பால் உலக அளவில் வருடத்திற்கு 59 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சிறுவர்களின் சதவிகிதம் அதிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இந்நோய் 95 சதவிதம் நாய் கடிப்பதன் மூலமே பரவுகிறது.வெறிநோய் பொதுவாக ராப்டோ வைரஸ் (Rhabdovirus) என்ற நச்சுயிரியால் உண்டாகும். இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய உயிர்க்கொல்லி நோய். இந்நோய் நாய், பூனைகள் கடிப்பதன் மூலம் மனிதர்களை மட்டுமே பாதிப்புக்குள்ளாக்கும் என நம்மில் சிலர் நினைக்கிறோம். ஆனால் நாம் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்ற அனைத்து பாலூட்டிகளையும் இந்த நோய் பாதிக்கும். இந்த நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட எந்த விலங்கினம் கடித்தாலும் பாதிக்கப்பட்ட விலங்கில் இருந்து எச்சில் மூலமாக கடிபட்ட விலங்கு அல்லது மனிதருக்கு இந்நச்சு பரவும். ஆனால் முறையாக நோய்த் தடுப்பூசி போடப்படாத தெரு நாய்களே இந்நச்சுயிரியை பரவச்செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நோய் பரவும் முறை

நோய்தடுப்பூசி போடப்படாத நோய் பாதித்த தெருநாய்கள் நேரடியாக மனிதர்களையோ அல்லது வேறு விலங்குகளையோ கடித்து, கடிபட்டு பாதித்த விலங்கினங்களின் எச்சில் அல்லது கடித்தல் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகிறது. கடிபட்ட விலங்கினம் அல்லது மனித உடலில் ஏற்படும் காயம் அல்லது ஏற்கெனவே உள்ள காயம் அல்லது கீறல்கள் வழியாக இந்த நச்சுயிரி உடலுக்குள் புகுந்து, தசை இழைகளில் பன்மடங்கு பெருக்கம் அடைந்து, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் முளையை அடைந்துவிடும். பிறகு மூளையில் அதிக அளவில் பெருக்கம் அடைந்து மூளைத் திசுக்களை அழிக்கத் துவங்கி நரம்பு மண்டலம் தொடர்பான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும் மற்ற நோய்களைப் போல் அறிகுறி தென்பட்ட உயிரனங்களில் மருத்துவம் என்பது கிடையாது. மரணம் மட்டுமே முடிவு. மேலும் நோய் பாதித்த உயிரினம் எப்போதும் இல்லாத வகையில் கட்டுப்பாடற்று ஆக்ரோசமாக செயல்படுவதால் மற்ற உயிரனங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பாக கையாள வேண்டும்.

நோயின் அறிகுறிகள்

நச்சுயிரி பாதிப்புக்கு உட்பட்ட விலங்கினம் அல்லது மனிதர்களில் பாதிக்கப்பட்ட 5 நாட்களில் இருந்து நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சில சமயங்களில் வெகுநாட்கள் அல்லது வருடங்களுக்கு பிறகு கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, வாயில் எச்சில் ஒழுகுதல், காய்ச்சல், வாந்தி வரும். உணவு உண்ண முடியாமை, தண்ணீர் குடிக்க முடியாமை மற்றும் தண்ணீரைக் கண்டாலே ஹைட்ரோபோபியா எனப்படும் பய உணர்வு, உடலில் அதிக வெளிச்சம் பட்டாலோ அல்லது முகத்தில் காற்று பட்டாலோ உடல் நடுங்குதல், எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுதல், அடிவயிற்றில் இருந்து சத்தமிடுதல், எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்துவது மற்றும் கடிப்பது ஆகிய அறிகுறிகள் தென்படும். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பு ஏற்படும்.

தடுப்பு முறைகள்

இந்த நோய் மிகவும் கொடிய நோய் என்றாலும் முறையான தடுப்பூசி போடப்பட்ட விலங்கினங்களை இந்நோய் பாதிப்பதில்லை. அதாவது உடலில் போதுமான நோய் எதிர் அணுக்கள் உள்ள விலங்கினங்கள் மற்றும் மனிதர்களில் நச்சுயிரி செயலிழந்துவிடும். எனவே மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் செல்லப் பிராணிகளுக்கும், கால்நடைகளுக்கும் தவறாமல் வெறிநோய் தடுப்பூசி போடுவது அவசியம். வெறிநோய்க்கு எதிரான தடுப்பூசி போட தவறினால் மனிதர்களுக்கும் பேராபத்தை உண்டாக்கும். எனவே செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவது அவசியம். இதற்காக செல்லப் பிராணியின் 3 மாத வயதில் முதல் தடுப்பூசியும் அடுத்த ஒரு மாதம் கழித்து இரண்டாவது முறையும் பிறகு வருடதிற்கு ஒருமுறையும் வெறிநோய்த் தடுப்பூசி போடுதல் அவசியம்.

இதர நோய் தடுப்பு முறைகள்

தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்பொழுது அதற்கு வெறிநோய்த் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என உறுதிசெய்ய வேண்டும். நாய்கள் நம்மைக் கடித்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். பிறகு கை கால்களை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். முன் அறிமுகம் இல்லாத தெருக்களில் சுற்றித்திரியும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வளர்க்கப்படும் மற்ற செல்லப் பிராணிகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியுடன் தடுப்பூசி போடுதல் அவசியம். எதிர்பாராத விதமாக நாய் கடிக்க நேர்ந்தால் உடனடியாக கடிபட்ட பகுதியை

சோப்பு கொண்டு நன்கு கழுவுதல்

வேண்டும். பிறகு உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.கால்நடைகளை வெறிநாய் கடிக்கும்பொழுது பெரும்பாலான நேரங்களில் கால்நடை உரிமையாளருக்கு தெரிவதில்லை. மேலும் சில சமயங்களில் தெரிந்தாலும் அதற்கான தடுப்பூசி போடுவதற்கு விவசாயிகள் முற்படுவது இல்லை. அதனால் ஏற்படும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போடுதல் அவசியம். இதை முறையாக கடைப்பிடித்து நம் கால்நடைச் செல்வங்களைக் காப்போம்!
– மருத்துவர் பி.முரளி மற்றும்
முனைவர். மா. விமலாராணி,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
காளசமுத்திரம், கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு: -83009 78770.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது