Tuesday, September 10, 2024
Home » சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

by Neethimaan

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதியைப் பொறுத்தவரை தமிழ்நாடு இருண்டகாலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதியில் தமிழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான். ஆனால், அந்த பெருமை அச்சாணி இல்லாத தேரைப் போலத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்தத் தேர் எப்போது கவிழும் என்பது தெரியாது. ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று 2010ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தாத நிலையில், அதை எதிர்த்து புதிய வழக்குகள் தொடரப்பட்டிருப்பது தான். அவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, எந்த நேரமும் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிடுவது தான். கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கிக் கிடக்கும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது எந்த அளவுக்கு மோசமான சமூகநீதியோ, அதை விட மோசமான சமூகநீதி அந்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு பொருந்தாத வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான்.

அதை விடக் கொடுமை, சூறைத் தேங்காயை உடைத்து வலிமையுள்ளவர்கள் பொறுக்கிக் கொள்ளுங்கள் என்பதைப் போல, நூற்றுக்கணக்கான சாதிகளை ஒரே பிரிவில் அடைத்து, மிகக் குறைந்த அளவிலான இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது. இவை இரண்டுமே உண்மையான சமூகநீதி அல்ல. ஓரிடத்தில் 100 பேர் இருந்தால், தேங்காயை 100 பத்தைகளாக வகுந்து பகிர்ந்து அளிப்பது தான் உண்மையான சமூகநீதி ஆகும். ஒரு தேங்காயை எத்தனைப் பேருக்கு பகிர்ந்தளிப்பது என்பதை தீர்மானிக்க, அந்த இடத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை, சமூக, கல்வி நிலையை கணக்கெடுத்து உறுதி செய்ய வேண்டியது அவசியம் அல்லவா? அந்த எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான கருவி தான் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும்.

‘‘ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’’ என்றொரு பழமொழி உண்டு. அது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டை சமூகநீதியின் தொட்டில் என்று கூறுவதுண்டு. அது ஒரு காலத்தில் உண்மை, ஆனால், இப்போது நிலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் குறித்து நீதியரசர் ரோகிணி ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ஓபிசி வகுப்பில் 2633 சாதிகள் உள்ளன. அவர்களில் 75 விழுக்காடான 1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அவர்களிலும் 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் இதுவரை கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், 656 சமூகங்கள், அதாவது 25 விழுக்காட்டினர் 97.34% இடங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர் என்பது தான் ரோகிணி ஆணையம் சொல்லும் உண்மையாகும். தமிழ்நாட்டின் நிலைமை ஆராயப்பட்டால், இதை விட மோசமான பாகுபாடுகள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவரும். இது சமூகநீதியை பீடித்த நோய் ஆகும். இந்த நோயைக் கண்டுபிடித்தால் தான் அதை குணப்படுத்த முடியும். அதற்கான ஸ்கேன் கருவி தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். ஆனால், சமூகநீதியை அரித்து வரும் நோயைக் கண்டுபிடிக்கவோ, குணப்படுத்தவோ இன்றைய திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. சாதி வேறுபாடுகள் ஒழியக்கூடாது; ஏற்றத்தாழ்வுகள் தீரக் கூடாது; அடித்தட்டு மக்கள் அடித்தட்டு மக்களாகவே நீடிக்க வேண்டும்;

அவர்கள் குடித்தும், இலவசங்களுக்கு கையேந்தியும் நமக்கு ஓட்டுப்போடுபவர்களாகவும் இருக்க வேண்டும். மேட்டுக்குடி மக்கள் மேட்டுக்குடிகளாகவே ஆதிக்கம் செலுத்த வேண்டும்; அவர்கள் அடிக்கடி மோதிக் கொண்டால் தான் நாம் நிம்மதியாக ஆள முடியும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் மனநிலையாக உள்ளது. இதை விட மோசமான மனோபாவம் இருக்க முடியாது. இதுவரை நான் பட்டியலிட்ட அனைத்து தீமைகளுக்கும் ஒரே மருந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கு எடுத்து, அதனடிப்படையில் சமூகநீதி வழங்குவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, சமூக நிலையை கணக்கிடுவது தான்.

இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு நிறுவனம் கடந்த 1985 முதல் 1992 வரை 7 ஆண்டுகள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 364 சாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சாதிகள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். கடந்த ஆண்டு பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொருவரின் கல்வித் தகுதி என்ன?, என்ன வேலை செய்கிறார்கள்?, கணினி/மடி கணினி வைத்திருக்கிறார்களா? அவற்றுக்கு இணைய இணைப்பு உள்ளதா? இரு சக்கர ஊர்தி முதல் மகிழுந்து, இழுவை ஊர்திகள் வரை ஏதேனும் ஓர் ஊர்தி வைத்திருக்கிறார்களா? விவசாய நிலம் உள்ளதா? வீட்டு மனை உள்ளதா? மாத வருமானம் ரூ/6,000 முதல் ரூ.50,000 வரை ஈட்டுபவரா? சொந்த வீடு உள்ளதா…

இல்லையா? வீடு இருந்தால் குடிசையா, ஓட்டு வீடா, மாடி வீடா? உள்ளிட்ட 17 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த விவரங்களைக் கொண்டு சமூகப்படிநிலையில் அடித்தட்டில் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமின்றி, வீடு கட்டித் தருவது, தொழில் தொடங்க கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகளை பிகார் அரசு மேற்கொண்டு வருகிறது. கர்நாடகம், ஒதிஷா, ஜார்க்கண்ட், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு சாத்தியமாகியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் சாத்தியம் தான். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை.

பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு செல்லும் என பட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றமும் அதற்கு தடை விதிக்கவில்லை. பொருளாதாரமும், மனிதவளமும் கூட அதற்கு தடையாக இருக்க முடியாது. பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக 45 நாட்கள் மட்டும் தான் செலவிடப்பட்டுள்ளன. அதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணியில் 2.64 லட்சம் பிகார் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.13 கோடி மக்கள்தொகை கொண்ட பிகாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி.

ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஆட்சியாளர்கள் தலைவணங்கியே தீர வேண்டும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். அந்த நம்பிக்கையுடன் தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். அதன் பயனாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்படுவதை அனைத்து சமுதாயங்களும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

nineteen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi