ஆர்டிஓவை கொல்ல முயன்ற வழக்கு; அதிமுக நிர்வாகி சிறையிலடைப்பு

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த கிளிக்குடி பகுதியில் மணல் திருட்டை தடுக்க கடந்த 13ம் தேதி இரவு இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி, அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் தனியார் காரில் சென்றனர். வளையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஆற்றுமணல் ஏற்றி அதிவேகமாக வந்த லாரியை ஆர்டிஓ தடுத்து நிறுத்த முயன்றபோது டிரைவர் சங்கர், லாரியை நிறுத்தாமல் ஆர்டிஓ கார் மீது மோதியதோடு, லாரி ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றார். டிரைவர் கனக பாண்டியன் சுதாரித்து காரை இடதுபுறமாக திருப்பிய போது கார் மீது லாரி மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆர்டிஓ உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக கனகபாண்டியன் அளித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கவிநாரிபட்டியை சேர்ந்த சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக ஓட்டுநர் அணி நிர்வாகி சுந்தரம் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சங்கரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுந்தரத்தை தேடி வந்த நிலையில் பரம்பூர் அடுத்துள்ள சொக்கம்பட்டியில் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

 

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு