மருத்துவர்களை மிரட்டி பணம் பறித்த பெண் ஆய்வாளர் உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு

தாம்பரம்: கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா அன்னகிருஷ்டி என்பவர் கடந்த 3ம் தேதி நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில், பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27), என்பவர் கடந்த 4ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த ஆய்வாளர் மகிதாஅன்னகிருஷ்டி, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறி தனியார் மருத்துவமனை மருத்துவர் உமா மகேஸ்வரி, கிளினிக் நடத்தி வரும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பராசக்தி ஆகியோரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தார். அதன்பேரில் ஆணையர் அமல்ராஜ், மகிதாஅன்னகிருஷ்டியை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கிளினிக்கில் ஆய்வு நடத்த வேண்டும் என்று புகார் தெரிவித்த ஒரு மருத்துவரிடம் நேற்று செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, அந்த மருத்துவர் சில ஆவணங்களை அளித்துள்ளார். இந்நிலையில், சிங்கப்பெருமாள் கோவிலில் கிளினிக் நடத்தி வரும் அரசு மருத்துவர் பராசக்தி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞரும், கூடுவாஞ்சேரி நகர அமமுக செயலாளருமான பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து தன்னை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் வழக்கறிஞரும், கூடுவாஞ்சேரி நகர அமமுக செயலாளருமான பன்னீர்செல்வம் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது