வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதில் தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நேற்று அறிவிப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் புதிதாக மூன்று மனுக்களை தாக்கல் செய்தார். மனுக்களில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை ஜூன் 21ம் தேதி வரவுள்ளது. வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

நீதிமன்ற உத்தவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். எனவே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இந்த மனுக்களுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Related posts

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!