வழக்கு எண்ணிக்கையை வைத்து முன்கூட்டி விடுதலை செய்ய மறுக்க முடியாது: ஆயுள் தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு


சென்னை: புதுச்சேரியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கு கொலை வழக்கில் கடந்த 2003ல் புதுச்சேரி 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உயர் நீதிமன்றம் 2006ல் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக காலாப்பேட்டை சிறையில் இருக்கும் தந்தையை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது மகன் வேணு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார் சிறையில் நற்பெயர் பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் பிஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார். பல்வேறு திறனறிவுகளையும் வளர்த்துள்ளார்.

அதனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு புதுச்சேரி குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரரின் தந்தை பிரேம்குமார் மீது 11 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அதில் 2 வழக்குகளின் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. அவரை முன்கூட்டியே விடுவித்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் மீதுள்ள 11 வழக்குகளில் 8 வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். இரண்டு வழக்குகளில்₹50 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் மட்டும் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். அவர் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்ற காரணத்திற்காக அவரை முன்கூட்டி விடுதலை செய்ய மறுக்க முடியாது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்