59 வழக்குகளுடன் சரித்திர குற்ற பதிவேட்டில் இருக்கும் பாஜ ஓபிசி பிரிவு செயலருக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் கே.வெங்கடேஷ், பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு கொடுத்தார். அதில், 2023ல் முத்துச்சரவணன் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதற்கு தான்தான் காரணம் என்று நினைத்து தனக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருவதாக கூறியிருந்தார். அவரது கோரிக்கையை காவல்துறை நிராகரித்தது. இதையடுத்து, தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, செங்குன்றம் உதவி கமிஷனரின் அறிக்கையை தாக்கல் ெசய்தார்.

அதில், கே.வெங்கடேஷ் மீது செங்குன்றம் மற்றும் ஆவடி குற்ற பிரிவில்10 வழக்குகளும், ஆந்திராவில் 49 வழக்குகளும் உள்ளது. இவருடைய பெயர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளது. செம்மரக் கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும். செம்மர கடத்தல் வழக்குகளும் இருப்பதால் போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி