அரசால் தடைசெய்யப்பட்ட கேரி பேக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு: அதிகாரிகள் சோதனை நடத்த கோரிக்கை

விருதுநகர்: விருதுநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.40 மைக்ரான் அளவுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பைகளை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் டம்ளர், தட்டு மற்றும் ஹோட்டல் கடைகளில் இலைகளுக்கு பதில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றையும் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இச்சட்டம் அமுலான சில மாதங்கள் பொது மக்கள் இவற்றை பயன்படுத்தவில்லை. கடைகளிலும் இப்பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அனைத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண மண்டபங்களிலும் இந்த டம்ளர் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சாலையோர மற்றும் பெரிய உணவகங்களில் கூட, தட்டில் இலை வைப்பதற்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களையே வைக்கின்றனர். இதனால், உணவு உண்பவர்களுக்கு ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இதேபோல், 40 மைக்ரானை விட குறைவாக உள்ள கேரி பைகள் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் கேரி பைகள், டம்ளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் ஆகியவை நீர் நிலைகளிலும் கழிவு நீர் செல்லும் வாறுகால்களிலும் கொட்டப்படுகின்றன.குறிப்பாக விருதுநகர் பாவாலி ரோடு, கிருஷ்ணமாச்சாரி ரோடு, புளூகனூரணி சாலை, பழைய அருப்புக்கோட்டை ரோடு, கீழக்கடைத் தெரு, சிவன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிமாக கொட்டப்படுகின்றன.இதனால் வாறுகாலில் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் வீதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனை அகற்ற முடியாமல் தூய்மை பணியாளர்கள் அவதியுறுகின்றனர். இதனால், கழிவுநீர் வாறுகால்களில் செல்ல முடியாததால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முறையாக உரிய ஆய்வு செய்வதில்லை என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தடை செய்யப்பட்ட கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்