கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனம்: போக்குவரத்து துண்டிப்பு

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சரக்கு வாகனம் சிக்கியது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம், கோவிலூர், கோம்பை தொட்டி ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப் பகுதியில் கரடு முரடான மண் சாலையில் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த 2 காட்டாறுகளிலும் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.

மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. குரும்பூர் பள்ளத்தில் உயர் மட்ட பாலம் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், சர்க்கரை பள்ளத்தில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சர்க்கரை பள்ளத்தில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மாக்கம்பாளையம் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்படாததால் மாக்கம்பாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவைக்கும் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும் செல்ல முடியாமல் தவித்தனர்.

கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் நோக்கி சென்ற சரக்கு வேன் சர்க்கரை பள்ளத்தில் ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.இருசக்கர வாகனங்களில் சென்ற மலை கிராமவாசிகள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கிய சரக்கு வேன் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து கயிறு கட்டி மீட்கப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டபோது, ‘‘இன்னும் ஒரு மாத காலத்தில் உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து தடையின்றி போக்குவரத்து நடைபெறும்’’ என தெரிவித்தனர்.

Related posts

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் மூடல்: பயணிகள் அவதி

பவன் கல்யாண் தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என துணை முதல்வர் உதயநிதி பதில்

இந்திக்கு மட்டும் எப்படி ஆள் கிடைக்கிறது?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி