சரக்கு போக்குவரத்து விமான சேவை இல்லாத நிலையிலும் ஆண்டுக்கு 6,409 மெ.டன் பொருட்கள் ஒன்பது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: திருச்சி சர்வதேச விமான நிலையம் அசத்தல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 6,409 மெ.டன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்காது. உள்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணி அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் உயரும். ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு கப்பல் மற்றும் விமானம் மூலம்தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியத்துவம் பெறுவது விமான சரக்கு போக்குவரத்துதான். கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளானது.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு விமானம் மூலம் கையாளும் சரக்கு ஏற்றுமதி சீராகியுள்ளது. ஆனாலும் திருச்சிக்கு என்று சரக்குகளை மட்டும் கொண்டு செல்லும் தனி விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இன்றுவரை பயணிகள் விமானத்தில் மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிலும் விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் முதலில் பயணிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே அவர்கள் கொண்டுவரும் உடமைகள் வைக்கும் இடம் போக, மீதமுள்ள இடத்திற்கு தகுந்தாற்போல் தான் சரக்குகளை ஏற்றி செல்ல அனுமதிக்கின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோஹா, கொழும்பு, கோலாலம்பூர் போன்ற நாடுகளுக்கு தினம் மற்றும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, வாரம் ஒருமுறை என்ற விகிதத்தில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது திருச்சியில் இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிண்டோ, ஏர் ஏசியா, ஸ்கூட் போன்ற பயணிகள் விமானங்கள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 18 மெட்ரிக் டன் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும், ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்படுகிறது.

இதில் 98 சதவீதம் காய்கறிகள், பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது. மீதி 2 சதவீதம் துணி வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் கொண்டு செல்லப்படுகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரும் பொருட்கள் 48 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் திருச்சி விமான நிலைய அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வருகிறது.

* இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு
திருச்சி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணி, சரக்கு முனைய மூத்த மேலாளர் நோபில் சாலமோன் ஆகியோர் கூறியதாவது: திருச்சி விமான நிலையத்தை பொறுத்தவரை ஏற்றுமதியை ஒப்பிடுகையில், இறக்குமதி மிகவும் குறைவு தான். ஓராண்டில் 2 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த இறக்குமதியும் விமான நிலையத்திற்கு தேவையான அலுவலக உபகரணங்கள் தான். இறக்குமதி என்பதே திருச்சியில் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அவற்றை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இறக்குமதியாளர்கள் அதிகளவில் முன்வர வேண்டும். அவர்களுக்கு தேவையான எல்லா ஆவணம் சார்ந்த பணிகளையும் சரக்கு முனையமே பார்த்துகொள்ளும். எனவே ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் அதிகளவில் திருச்சி விமான நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அனைத்து அடிப்படை பிரச்னைகளும் சீர் செய்யப்படும் என்றனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு