கமகமக்கும் ஏலக்காய் சாகுபடி!

தமிழகத்தில் மிகவும் வித்தியாசமான நில அமைப்பு கொண்டது கம்பம் பள்ளத்தாக்கு. கம்பத்தில் நின்று எந்தப்பக்கம் திரும்பினாலும் பிரமாண்டமான மலைத்தொடர்கள் தெரியும். சுட்டெரிக்கும் கோடை காலத்தில் கூட சில சமயங்களில் இதமான சூழல் நிலவும். இப்படியொரு சூழலில் கம்பத்தில் இருந்து கேரள மாநில பகுதியான புளியமலைக்குப் பயணமானோம். அங்குதான் இருக்கிறது அப்துல் ரகீமின் ஏலக்காய்த்தோட்டம். தலைமுறை தலைமுறையாக ஏலக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறது அப்துல் ரகீம் குடும்பம். கம்பத்தில் வசித்தாலும் தங்களது ஏலக்காய்த் தோட்டத்தைப் பார்க்க வாரத்தில் 3 முறை புளியமலைக்கு சென்று விடுகிறார் அப்துல் ரகீம். ஏலக்காய் சாகுபடி குறித்த தகவல் வேண்டும் என்றதும் நம்மையும் அழைத்துச் சென்றார். கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கேரள எல்லைப் பகுதியான கம்பம் மெட்டைக் கடந்து சில கேரளக் கிராமங்களைப் பார்த்துக்கொண்டே பயணித்து புளியமலையை அடைந்தோம். தங்களது ஏலக்காய்த் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தவாறே நம்மிடம் பேசத்துவங்கினார் அப்துல் ரகீம்.

“ எனக்குத் தெரிந்து அப்பா காலத்தில் இருந்து ஏலக்காய் விவசாயம் செய்து வருகிறோம். இப்போது எனது அண்ணன் ஜெயின்லாபுதீன், தம்பிகள் அகமது மீரான், முகமது நிஜாம் ஆகியோரும் ஏலக்காய் விவசாயம் செய்கிறார்கள். இந்த இடத்தில் எனக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் நான் ஏலக்காயை சாகுபடி செய்கிறேன். ஏலக்காய்ச்செடி பல வருடத்திற்கு பலன் தரும். சாகுபடி முறையும் எளிது. வருமானம் நிச்சயம். இந்தக் காரணங்களால்தான் இதைத் தொடர்ந்து செய்கிறோம்’’ என தங்களது குடும்பம் பற்றியும், ஏலக்காய் சாகுபடியின் மகத்துவம் குறித்தும் சுருக்கமாக பேசிய அப்துல் ரகீமிடம் ஏலக்காய் சாகுபடி விபரங்களைக் கேட்டோம்.“ இது முழுக்க மலைப்பகுதி. சரிவாகத்தான் இருக்கும். நிலம் சமமாக இருக்காது. இதில் ஏர் ஓட்ட முடியாது. மண்வெட்டி வைத்து நிலத்தைக் கொத்தி தயார்படுத்துவோம். இப்போது அதைக்கூட செய்வது கிடையாது. நிலத்தில் செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை என 2 அளவிலும் 10*10 என்ற அளவில் இடைவெளி கொடுத்து குழியெடுப்போம். குழியை 2 அடி அகலம், ஒன்றரை ஆழம் என்ற அளவில் எடுப்போம். முன்னதாக சாகுபடி செய்த செடிகளில் இருந்து தரமான சிம்புகளைத் தேர்ந்தெடுத்து நாற்று தயார் செய்வோம். வாழைக்கு பக்கக்கிளைகள் வருவது போல் ஏலக்காய் செடியிலும் பக்கக்கிளைகள் வரும். அதைத்தான் நாங்கள் சிம்பு என்போம். இந்த சிம்புவை முற்றியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் பக்குவமான பதத்தில் தேர்ந்தெடுத்து நாற்றுக்கு தயார்படுத்துவோம்.

நடவுக்குழியில் ராக் பாஸ்பேட், மட்கிய எரு, எலும்புத்தூள் ஆகியவற்றைக் கலந்து இட்டு, அதில் நாற்றை நடுவோம். ஏலக்காய்ச் செடியில் வேர் அதிக ஆழம் போகாது. இதனால் மேலோட்டமாக நட்டாலே போதும். தரையில் இருந்து முக்கால் அங்குலத்தில் நாற்றை நட்டாலே போதும். நட்ட பிறகு மட்கிய இலை, தழைகளை செடிகளைச் சுற்றி போடுவோம். இவ்வாறு செய்வது அவசியம். மேலாகவே நடவு செய்வதால் வேரும் மேலாகவே படரும். இலை, தழை போட்டு மூடாக்கு அமைப்பதால் செடியில் சூடு ஏறாமல் காக்கலாம். இவ்வாறு செய்துவர 1 மாதத்தில் புதிய வேர்கள் வரும். ஒன்றரை மாதத்தில் வேம்பு, நிலக்கடலை, எள், முத்து, இலுப்பை, தேங்காய் உள்ளிட்ட புண்ணாக்குகளைக் கலந்து, அந்தக் கலவையை தண்ணீரில் ஊறவைப்போம். அது புளித்த பிறகு செடியைச் சுற்றி தெளிப்போம். இதுபோல் மாதந்தோறும் செய்வோம். இதேபோல ராக் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து தெளிப்போம். ஆரம்ப காலத்தில் எம்ஏபி, டிஏபி ஆகிய உரங்களை தண்ணீரில் கலந்து தெளிப்போம். ஒன்றரை மாதத்தில் முதல் களையையும் எடுப்போம்.

ஏலக்காய்ச் செடியில் தண்டுத்துளைப்பான் மற்றும் பேன் தாக்குதல் இருக்கும். இதற்கு உரிய மருந்தை அவ்வப்போது கொடுப்போம். அதேபோல கிழங்கு அழுகல், சரம் அழுகல், தண்டு அழுகல் உள்ளிட்ட நோய்கள் வரும். இதற்கு போர்டோக் கலவையைத் தெளித்து கட்டுப்படுத்துவோம். இந்தக் கலவையை மழைக்காலங்களில் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும். இதில் பூஞ்சான், நூற்புழுத் தாக்குதலும் இருக்கும். நூற்புழுக்களின் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் இலைகள் சிறுத்து செடிகள் சேதமாகிவிடும். இதனால் மகசூல் வெகுவாக பாதிக்கும். இதற்கும் உரிய காலத்தில் தகுந்த மருந்துகளைக் கொடுப்போம். களைகளை அவ்வப்போது அகற்றுவோம். களைகளை அகற்றும்போது நிலத்தை சுத்தப்படுத்தி உரம் வைப்போம். ஆனால் மூடாக்கு எப்போதும் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். வருடத்திற்கு எப்படியும் 3 முறை களையெடுப்போம். செடிகள் நன்கு வளர்ந்துவிட்டால் தலைகூடி சூரிய வெளிச்சம் குறைவாகவே விழும். இதனால் களைகள் அதிகம் வராது. தண்ணீர் பாசனத்துக்கு மிஸ்ட்டர், மினி ஸ்பிரிங்கள் பயன்படுத்துகிறோம். இதனால் குறைந்த அளவிலான தண்ணீரை சிக்கனமாக கொடுக்க
முடிகிறது.

இவ்வாறு பராமரித்து வரும் பட்சத்தில் முதல் வருடத்திலேயே காய்ப்பு வரும். இதை நாங்கள் கன்னிக்காய்ப்பு என்போம். இந்த சமயத்தில் செடிக்கு 300 கிராம் மகசூல் கிடைக்கும். 2வது வருடத்தில் ஒவ்வொரு செடியிலும் ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஏலக்காய்க்கு ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை சீசன். சீசன் சமயங்களில் செடியில் உள்ள ஒவ்வொரு தட்டையிலும் 2, 3 சிம்புகள் வரும். 3, 4 சரங்கள் வரும். ஒரு சரத்தில் 20 கொத்துகள் வரும். ஒரு கொத்தில் ஒரு பூ வரும். பூ பின்பு அரும்பாக மாறும். அதில் 5, 6 காய்கள் இருக்கும். காய்கள் முற்றும் சமயத்தில் அறுவடை செய்வோம். கிளிப்பச்சை நிறத்தில் இருக்கும் காய்கள் டார்க் பச்சைக்கு மாறும். பின்பு அது பழுக்கும் பருவத்திற்கு வரும். பழுப்பதற்கு முன்பு சரியான பதமாக பார்த்து அறுவடை செய்வோம். காய்களை சிறியதாகவும் பறித்துவிடக்கூடாது. பழுக்கவும் விட்டுவிடக் கூடாது. சிறியதாக பறித்தால் எடை வராது. பழுத்தால் டிரையரில் போடும்போது வெடிக்கும்.

அறுவடை செய்த பதமான காய்களை டிரையரில் போட்டு டிரை செய்வோம். முன்பு காய வைப்போம். இப்போது நாங்களே எங்கள் நிலத்தில் டிரையர் அமைத்து டிரை செய்கிறோம். டிரையரில் போட்டு எடுத்தால் ஒரு காயில் 24 அரிசிகள் இருக்கும். இதுதான் நமக்கு வரும் ஏலக்காய். அதில் சிறு அளவிலான பூக்கள் ஒட்டி இருக்கும். இதனால் அதை ஒரு பிரத்யேக இயந்திரத்தில் கொடுத்து தேய்ப்போம். பூக்கள் எல்லாம் உதிர்ந்து அசலான ஏலக்காய் கிடைக்கும். அதை நாங்கள் கிரேடு வாரியாக பிரித்து விற்பனைக்கு எடுத்துச் செல்வோம். நான்கரை கிலோ பச்சைக் காய்களை டிரையரில் போட்டு எடுத்தால் ஒரு கிலோ ஏலக்காய் கிடைக்கும். ,இதுபோல் வருடத்திற்கு சுமார் 6 முறை மகசூல் எடுக்கலாம்.

தமிழகத்தில் போடிநாயக்கனூரில் ஆக்‌ஷன் கம்பெனி (ஏல விற்பனை மையம்) இருக்கிறது. கேரளாவில் வண்டமேடு மற்றும் குமுளியில் ஆக்‌ஷன் மையங்கள் இருக்கின்றன. நாங்கள் அருகில் உள்ள வண்டமேட்டில் விற்பனை செய்து விடுகிறோம். ஒரு கிலோ ஏலக்காய் ரூ.700 முதல் 4 ஆயிரம் வரை விலை போகும். சராசரியாக ரூ.ஆயிரம் விலையாக கிடைக்கும். ஏக்கருக்கு 500 முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும். குறைந்தபட்சமாக 500 கிலோ கிடைத்தாலே ரூ.5 லட்சம் வருமானமாக கிடைக்கும். ஏலக்காய் சாகுபடியில் ஏறக்குறைய மூன்றரை லட்சம் செலவாகும். இதுபோக ஏக்கருக்கு ரூ.ஒன்றரை லட்சம் லாபம் பார்க்கலாம் சில சமயங்களில் ரூ.5 ஆயிரத்திற்கு கூட விலை போயிருக்கிறது. குறைந்த விலைக்கும் போயிருக்கிறது. அதைப் பொறுத்து லாபக் கணக்கு மாறும். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகையை லாபமாக பார்க்கலாம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
அப்துல் ரகீம் – 99945 09966.

நிழல் அவசியம்

ஏலக்காய்க்கு நிழல் மிக அவசியம். அதாவது 60 சதவீதம் நிழல் இருக்க வேண்டும். இதற்காக மலைப்பூவரசு மரத்தை நிலத்தில் வளர்க்கிறோம். இதைக் கேரளாவில் சோரக்காளி என அழைக்கிறார்கள். மேலும் பலா உள்ளிட்ட மரங்களையும் வளர்த்து ஏலக்காய்க்கு நிழல் கிடைக்கச் செய்கிறோம். இதற்கு 40 சதவீதம் சூரிய வெளிச்சமும் வேண்டும். அதற்கேற்றார்போல் மரக்கிளைகள், இலைகளை அகற்றி வர வேண்டும். அவ்வாறு அகற்றும்போது அந்தச் செடிகளையும் ஏலக்காய்ச் செடிகளுக்கு மூடாக்காக பயன்படுத்திக்கொள்வோம். அவ்வப்போது காய்ப்பு முடிந்த தட்டைகளையும் அகற்றுவோம். அதையும் நிலத்திலேயே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறார் அப்துல் ரகீம்.

ஊடுபயிரிலும் வருமானம்

ஏலக்காய் சாகுபடி செய்யும்போது மரங்கள் வைத்து அதன் அருகில் மிளகுச்செடிகளை நடவு செய்து விடுகிறார்கள். ஏலக்காய்ச் செடிகள் வளர்ந்து கொடியாகி மரங்களில் ஏறிக்கொள்ளும். இது ஏலக்காயில் ஊடுபயிராக பலன் கொடுக்கிறது. இதன்மூலமும் கூடுதலாக வருமானமாக பார்க்கிறார்கள் ஏலக்காய் விவசாயிகள்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!