கார் – லாரி மோதல்: 4 பேர் பலி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று கார் – கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியதில், கப்பல் ஊழியர் உள்ளிட்ட மூவர், லாரி டிரைவர் பலியாயினர்.கன்னியாகுமரி மாவட்டம், செங்குடி அருகே செங்கண்குழிவிலை குமரன்குடியை சேர்ந்தவர் ஜேம்ஸ் மார்ட்டின்(34). இவர் கப்பலில் பணி புரிந்து வந்தார். 2 வாரங்களுக்கு முன்பு இவரது தந்தை செல்வம் இறந்தார்.

இதனால் ஜேம்ஸ் மார்ட்டின் விடுப்பு எடுத்துக் கொண்டு கன்னியாகுமரி வந்துள்ளார். இவரது தம்பி சாம் டேவிட்சனையும்(30) கப்பல் பணியில் சேர்த்து விட முடிவு செய்த ஜேம்ஸ் மார்ட்டின், நேற்று முன்தினம் இரவு குமரியிலிருந்து சென்னைக்கு தம்பியையும் அழைத்துக் கொண்டு காரில் கிளம்பியுள்ளார். இவர்களுடன் பெரியப்பா மகன் கமலேஷும்(50) வந்துள்ளார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அடுத்து விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்றபோது கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி, எதிர் திசை நோக்கி பாய்ந்தது. அப்போது பெங்களுரிலிருந்து மதுரை வழியாக நெல்லைக்கு சென்று கொண்டிருந்த மினி கன்டெய்னர் லாரி மீது கார் மோதி கவிழ்ந்தது.

லாரியும் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 3 பேர், கன்டெய்னர் லாரி டிரைவரான மதுரை விரகனூர், நெடுங்குளத்தை சேர்ந்த செல்வகுமார்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாட்டில் சிக்கிய உடல்களை கள்ளிக்குடி போலீசார், தீயணைப்புத்துறையினர் வந்து நீண்ட நேரம் போராடி மீட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை