கேப்டன் எழுந்திருங்க…: கதறி அழுத தொண்டர்கள்

சென்னை: கேப்டன் எழுந்திருங்க…. என்று தொண்டர்கள் கதறி அழுதது பார்ப்போர் மனதை கரையச் செய்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடல் அருகே பிரேமலதா விஜயகாந்த் அமர்ந்திருந்தார். விஜயகாந்த் உடல் மீது ஒரு போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அவரது கன்னத்தில் கை வைத்தபடியே பிரேமலதா அழுது கொண்டிருந்தார். விஜயகாந்த் உடல் அவருடைய வீட்டை அடைந்த போது தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொட்டபடியே கதறினர். சிலர் ஆம்புலன்ஸை அடித்து கேப்டன் எழுந்திருங்க என கதறினர். ஆம்புலன்ஸை சூழ்ந்துகொள்ள அவர்கள் முயன்றதை போலீசார் தடுத்து வீட்டு வாசலுக்குள் வரை செல்லும் வகையில் கொண்டு சென்றனர். இதன் மூலம் நேரடியாக வீட்டின் முன் பக்கம் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது.

அந்த நேரத்தில் வீட்டை சுற்றி நின்ற தொண்டர்கள், ரசிகர்கள் பெருத்த குரலில் கதறி அழுதனர். உடனே ஆம்புலன்ஸில் இருந்து பிரேமலதா இறங்கி தொண்டர்களை பார்த்து துக்கம் தாளாமல் கதறி அழுதார். அவரை கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வீட்டில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு பக்கத்தில் நின்றவாறே பிரேமலதா கதறி அழுத காட்சி பார்ப்போர் மனதை கலங்கடித்தது. பின்னர் மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அருகிலேயே பிரேமலதா, சுதீஷ், கட்சி நிர்வாகி பார்த்தசாரதி உள்ளிட்டோர் நின்று அழுது கொண்டிருந்தனர். தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கேப்டன் எழுந்து வாருங்கள் என்று ேகாஷமிட்டவாறே கதறி அழுதது பார்ப்போர் மனதை கரையச் செய்வதாக இருந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?