கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர்கள் சங்கம்

சென்னை: தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.26ம் தேதி மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்று(டிச.28) வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.விஜயகாந்தின் உடல்நிலை குறித்த, மருத்துவ அறிக்கை இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது இறுதிபயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்