வரம்பு மீறலாமா..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீப காலமாக தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இது, மாநிலம் முழுவதும் விமர்சனங்களை எழச்செய்துள்ளது. அதாவது, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட `நீட்’ விலக்கு மசோதா, ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதுபோல், தமிழக அரசு அனுப்பிய பல மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத நிலை நீடித்து வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க, நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மரபுப்படி உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையில் சில பத்திகளை வாசிக்காமல் விட்டு விட்டார். அதன் நீட்சியாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். ஆளுநரின் இந்த செயல்பாடு, மரபு மீறல் ஆகும். எனினும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் கொடுக்கவேண்டும் என்று தமிழக அரசு தரப்பில், ஆளுநரிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட, இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால், அதற்கு நாகரிகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள்’’ என வெளிப்படையாக பேசியுள்ளார். ஆளுநரின் இந்த கருத்துக்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சர்வ கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களை ஆளுநரால் அப்படியே வைத்துக்கொள்ள முடியாது என்பதை நாடறியும்.

ஒன்று – அனுமதிக்க வேண்டும், இல்லையேல் – நிராகரிக்க வேண்டும். ஏனெனில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் விரோத சட்டங்களை ஒருபோதும் இயற்றாது. எந்த ஒரு மசோதாவையும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்திருக்கலாம். பின்னர் மறுக்கிறேன்… என சொல்லியாக வேண்டும். இதுதான் நடைமுறை. இதை பின்பற்றாமல், மாநில அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டமன்ற மாண்பை மீறி செயல்படுவது என்பதெல்லாம் அவரது வரம்புக்கு மீறிய செயலாகவே கருதப்படுகிறது. ஆளுநராக இருப்பவர், மாநில அரசுடன் ஒருமித்த கருத்துடன் இணக்கமாக செயல்பட்டால் மட்டுமே அம்மாநிலத்தின் வளர்ச்சி சீராக இருக்கும். இதை விடுத்து, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது, ஜனநாயக விரோத செயல் ஆகும்.

பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றபோது, ஆர்.என்.ரவியை “தமிழ்நாடு வரவேற்கிறது’’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஆனால், அந்த சமயத்தில், நாகா சமூகத்தினரோ, நாகாலாந்திலிருந்து ஆர்.என்.ரவி வெளியேறுவதை கொண்டாடினர். நாகாலாந்து போராளிகள், அன்று ஏன் கொண்டாடினார்கள் என்பது இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய துவங்குகிறது. பனிப்போருக்கு ஆர்.என்.ரவி தயாராகிறார். ஆனால், அது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் எடுபடாது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி