Monday, September 16, 2024
Home » ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!

ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!

by Nithya

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 75 (பகவத்கீதை உரை)

தஸ்மா தக்ஞானஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஞானாஸினாத்மன சித்த்வைனம் ஸம்சயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத (4:42)

‘‘ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி. அப்படி எறிந்தாயானால், அத்தகைய யோகத்தை மேற்கொண்டாயானால், உன் போர் வாள் உயரே எழும். உன் லட்சியம் பூர்த்தியடையும்.’’ இல்லாததையெல்லாம் இருப்பதாகக் காட்டுவது சந்தேகம். இருப்பதையும் இல்லாததாகக் காட்டுவதும்அதுவே! இந்த சந்தேகம் எதனால் எழுகிறது? பெரும்பாலும் குற்ற உணர்வினால் தான்; சுய நம்பிக்கை அற்றுப் போவதால்தான்.

கண்கள் பார்ப்பதையும், காதுகள் கேட்பதையும் வைத்து உடனே எந்த முடிவுக்கும் வரக்கூடாது. ‘மெய்ப்பொருள்’ காணவேண்டும். அப்படி மெய்ப் பொருள் காண, ஞானம் வேண்டும். இது அப்படி இருக்குமோ என்ற சந்தேகத்துக்கும், இது அப்படி இருக்காது என்ற உறுதிக்கும் இடைப்பட்ட நிலையில் ஞானம் தடுமாறுகிறது.

ஒரு சம்பவத்தில் தோன்றும் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்டாலும், இன்னொரு சம்பவத்தில் மீண்டும் சந்தேகம் தோன்றுகிறது என்றால், அந்த மனதுக்குள் ஞானம் புக அஞ்சுகிறது என்று அர்த்தம். இருசம்பவங்களுக்குமான பரிமாணங்கள், காலநிலை, சூழல் எல்லாம் மாறுபட்டிருப்பதே இரண்டாம் முறையும் சந்தேகம் முளைவிடக் காரணம். ஆனால், எல்லாமே மாயை என்ற உணர்வு வந்துவிட்டால், அதாவது ஞானம் பிறந்துவிட்டால், சந்தேகம் கிளர்ந்தெழ வாய்ப்பே இல்லை, ஒருமுறைகூட!ஏற்கெனவே சொன்னதுபோல, சுயம்தான் சந்தேக விருட்சத்தின் ஆணிவேர். நான், எனது என்ற தற்குறித்தனமே சந்தேகத் தீக்கு நெய் வார்க்கிறது.

இந்த சுயம் தலை தூக்காதிருக்க வேண்டும் என்றால், புத்தியை சமநிலையில் வைத்துவிடு என்று கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார். வலப்பக்கம் விழக்கூடிய நிலை ஏற்பட்டால், இடப்பக்கம் சாய்ந்து, விழுந்து விடாமல் ‘பேலன்ஸ்’ செய்து கொள்ள வேண்டும் சர்க்கஸில் கம்பிமேல் ஒற்றைச் சக்கர சைக்கிள் ஓட்டுபவரைப்போல! பார்க்க முடியாத, உணர முடியாத ஆன்மாவைப் பற்றி ஏற்பட்டிருந்த சந்தேகத்தாலேயே அர்ஜுனன் தனி மனித உறவு பற்றிய பந்தத்தில் ஆழ்ந்திருந்தான்.

அதனால்தான் அவன், எழுந்து நின்று நாண் பூட்டி, எதிரிகள் மேல் அம்பெய்ய வலுவில்லாதவனாக இருந்தான். இந்தப் பிறவியில் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, இந்தப் பிறவியின் பாவ, புண்ணியங்களை அடுத்தப் பிறவிக்கான உடலுக்கு எடுத்துச் செல்கிறது என்ற உண்மையை யாராலும் அறிய முடியாததுதான். முந்திய பிறவியின் நினைவு, இந்தப் பிறவியில் தொடர முடியாத மனித இயலாமையால்தான் ஆன்மா பற்றிய உண்மையை அறிந்துகொள்ள முடியாமல் போகிறது.

அப்படி நினைவு இல்லாதிருப்பதும் நல்லதுக்குதான். இருக்குமானால், இந்தப் பிறவி மட்டுமல்லாது, முந்தையப் பிறவியின் அனுபவ உணர்வுகளையும் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்! இந்த இரட்டை வேதனை வேண்டாம் என்று கருதிதான் பகவான் அப்படி ஒரு மறதியை மனிதப் பிறவிக்கு நல்ல குணமாக்கியிருக்கிறார்!ஆனால், உடல் அழிவதும், உயிர் பிரிவதுமான சம்பவங்களை அனுபவிக்கவும், பார்க்கவும் முடிந்த இப்பிறவியில் ஆன்மா பற்றிய உண்மையை மட்டும் உணர முடிவதில்லை.

இதற்கு முக்கிய காரணம், சுயம்தான். நம்முடனேயே இருக்கும், நம்முடன் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளாத ஓர் அம்சம் நமக்குள் இருக்கிறது. அதை உணர முடியாதபடி சுயம் மறைக்கிறது. அதேசமயம் ஞானத்தைப் பயின்று கொள்ள முடியுமானால் அந்த ஆன்மாவையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அர்ஜுனன் தன் பராக்கிரமத்தின் மேல் பூரண நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால், தான் எதிர்க்க வேண்டியவர்கள் தன் சொந்தங்களே என்ற மயக்கத்தில் தன் பலம் அனைத்தும் வடிந்தவனாகிப் போனான். இதே மனநிலை ஆஞ்சநேயருக்கும் வந்தது. சீதையை மீட்கும் முயற்சியில் கடற்கரைக்கு வந்து நின்ற அவர் மயங்கினார். இவ்வளவு பெரிய கடலைத் தன்னால் கடக்க முடியுமா என்ற தயக்கம்.

இவரைப் பொறுத்தவரை சீதையை மீட்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்கு ராமன், ராவணனை வதம் செய்ய வேண்டும். அதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த நோக்கம் நிறைவேற தன்னால் முழுமையாக உதவ முடியுமா, இந்த மாபெரும் கடலைத் தாண்டும் பராக்கிரமம் தனக்கு உண்டா என்று சந்தேகம் அவனுக்குள் ஏற்பட்டது. அப்போது ஜாம்பவான் அங்கே வந்து, அனுமனின் உண்மையான பலம் என்ன என்பதை அவனுக்கே அறிவுறுத்தி, அவனுடைய சந்தேகத்தைப் போக்கினான்.

தன் எதிரே நிற்கும் சொந்தங்கள்

எல்லாம் மாயை என்ற உணர்வு அர்ஜுனனுக்கு வரவில்லை. ஆஞ்சநேயருக்கு அந்தக் கடல் மாயை என்ற உணர்வு தோன்றவில்லை. கிருஷ்ணன் துணை இருக்க அந்த மாயைகளையெல்லாம் வெகு எளிதில் வீழ்த்திவிட முடியும் என்று அர்ஜுனனுக்கும் தோன்றவில்லை. ராமன் துணை இருக்க, தன் முன்னே விரிந்திருக்கும் மாயையை வெல்லும் துணிவு அனுமனுக்கும் இருக்கவில்லை. அனுமனுக்கு ஜாம்பவான் மாயையை விலக்கினான். ஆனால், அர்ஜுனனுக்கு மாயையை விலக்க பகவானே பலவாறாக முயற்சிக்க வேண்டியிருக்கிறது! ஞானத்துக்கு வழிகாட்டுவது நிலையான புத்தி. காற்றுப் புகாவண்ணம் கதவும், ஜன்னல்களும் சாத்தப்பட்ட ஓர் அறையில் ஒரு தீபம் எப்படி கொஞ்சமும் அலையாமல் நிலைத்து எரிகிறதோ அதுபோல இருக்கவேண்டியதுதான் புத்தி. இதுபோன்ற மன நிலைப்பாட்டில்தான் ஞானம் பிறக்கும்.

ஒருவர் தர்மம் செய்வதென்று முடிவெடுத்தார். குறிப்பிட்ட சமூகசேவை அமைப்புக்குச் சென்று ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்று தீர்மானித்தார். ரூபாயைப் பையில் போட்டுக்கொண்டு அந்த அமைப்பை நோக்கிப் பயணித்தார். போகும் வழியிலேயே திடீரென ஒரு சிந்தனை. ‘ஆயிரம் கொடுக்கத்தான் வேண்டுமா? நாம் மட்டும்தான் தானம் கொடுக்கிறோமா என்ன, நம்மைப்போல நிறைய பேர் கொடுப்பார்கள்தானே? அதனால் ஐநூறு போதும்’ என்று நினைத்தார்.

இன்னும் கொஞ்சதூரம் போனதும் ‘என்னைவிட நிறைய தொகையை தானம் கொடுப்பவர்கள் இருப்பார்கள். அதனால் நான் கொடுத்துதான் இந்த அமைப்புக்கு நிதி சேரவேண்டுமா? ஆகவே நூறு போதும்,’ என்று முடிவு செய்தார். அமைப்பு அலுவலகத்துக்குள் அவர் நுழைந்தபோது, ‘இந்த நூறு ரூபாய் என்ன பெரிய பொருளாதார ஏற்றத்தை இந்த அமைப்புக்கு ஏற்படுத்திவிடப் போகிறது? அதோடு நாம் மட்டும்தானா, வேறே எத்தனையோ பேர் கொடுக்காமலா போய்விடுவார்கள்?’ என்று மனம் மாறி ஒரு ரூபாய்கூடக் கொடுக்காமல் திரும்பினார் அவர்! கொடுக்க வேண்டும் என்று முதலில் மனம் விரும்பியது, நேரமாக ஆக, தான் கொடுக்கும் கொடையால்தான் அந்த அமைப்புக்கு நிதி சேர வேண்டுமா என்ற யோசனைக்குப் பின்னால், அந்தப் பணத்தைத் தான் இழக்க விரும்பாத தன்மையே, அதாவது முற்றிலுமான சுயநலமேநிலைத்திருந்தது!

புத்தி பேதலிக்காமல் இருக்கும்போதுதான் அந்த மனதுக்குள் ஞானம் புக முடியும். தானமளிக்கப்படும் தொகை ஒரு பொருட்டல்ல, ஆனால் அதற்கு அனுமதி அளிக்க மனம் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. என்ன வேடிக்கை பாருங்கள், நிலையில்லாத பணத்தை கொடுக்கவும், பிறகு மறுக்கவும் செய்யும் மனோநிலை! ஞானத்தை வாளுக்கு ஒப்பிடுகிறார் கிருஷ்ணன். கூரிய வாள், ஒரே வீச்சில் எதிரே இருப்பதை இரண்டு துண்டுகளாகக் கூறுபோடக்கூடிய கூர்மையான வாள். அந்த ஞானம் என்ற வாளால் எது சரி, எது சரியல்ல என்பதைத் தீர்மானிக்க முடியும். சந்தேகங்களை அடியோடு வெட்டி எறிய முடியும். இந்த வெட்டலுக்குப் பிறகு மறு பரிசீலனையே இல்லை. மீண்டும்பின்னோக்கிச் செல்ல முடியாது.

‘ஞான வாளினால் உன் சந்தேகங்களை வெட்டியெறி,’ என்று கிருஷ்ணன் சொல்ல, அதை அப்படியே அர்ஜுனனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஞானத்தை அவன் அடைய முடியாதபடி அவனுடைய புத்தி அவனை அலைக்கழிக்கிறது. ‘நானும் முயற்சி செய்துதான் பார்க்கிறேன்….’ என்று அவன் கிருஷ்ணனுக்கு பதிலளித்திருக்கக் கூடும்!. சூழ்நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் ஒருவன்தான் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்பான்.

கிடைக்கும் பதில்கள் தனக்குப் புரியாததுபோல நடிப்பான் அல்லது புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவனாகவே இருப்பான். ஏனென்றால் அந்தச் சூழ்நிலையிலிருந்து தான் விடுபட்டுவிட வேண்டும், அனாவசிய பொல்லாப்புக்குத் தான் ஆளாகிவிடக் கூடாது என்று, ஏற்கெனவே, தீர்மானமாக அவன் கருதிவிட்டதுதான் முக்கிய காரணம். எப்படி விடுபடுவது என்பதில்தான் அவனுக்குக் குழப்பம் மேலோங்குகிறது. பகவானே பக்கத்தில் அமர்ந்தபடி அவனுக்கு ஞானத்தை ஊட்டும்போதும், அதை முழுமையாக அர்ஜுனன் ஏற்க மறுக்கிறான் என்றால், அவன் மூடன்தானே? அதாவது, புத்தி பேதலித்தவன்தானே! அவனுடைய மனதை, இலக்கு நோக்கி நிலைநிறுத்தமுயற்சிக்கிறார் கிருஷ்ணன்.

இந்த நான்காவது அத்தியாயம், ‘ஞான கர்ம சன்யாஸ யோகம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஞானம், ஸன்யாஸம் – இரண்டுக்கும் நடுவே கர்மா. அதாவது, ஞானபூர்வமான கர்மம். இது சித்திக்குமானால், ஸன்யாஸம் பலிதமாகிறது என்று பொருள். ஒவ்வொரு கர்மமும் ஞானபூரணமாக அமைய வேண்டும். ஏனென்றால் அஞ்ஞானத்துடன் மேற்கொள்ளப்படும் எந்தக் கர்மாவாலும் பாபமே நேருகிறது. அதேசமயம் ஞானத்துடனான கர்மா எதுவானாலும் அதனால் பாபம் நேர்வதேயிதில்லை.

இந்த அத்தியாயத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணரின் ஒரே நோக்கம், அர்ஜுனனின் வளைந்த முதுகெலும்பை நிமிர்த்துவதுதான். பின்னோக்கிஓட யத்தனிக்கும் அவனுடைய காலை இழுத்து முன்னோக்கி வைப்பதுதான். ஆனால் அர்ஜுனன் தெளிந்தானா? தெளிவானா? அடுத்து வரும் 5வது அத்தியாயமான ஸன்யாஸ யோகம் விடை தருகிறதா என்று பார்க்கலாம்.
(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

fifteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi