ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்க மனு கெஜ்ரிவாலுக்கு புற்றுநோய் அறிகுறி: அமைச்சர் அடிசி பரபரப்பு தகவல்

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அவருக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வெளியில் வந்த அவர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மாநில நிதித்துறை அமைச்சர் அடிசி நேற்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமீனை 7 நாட்களுக்கு நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மற்றும் நீதிமன்ற காவலில் இருந்தபோது அவரது உடல் எடை 7 கிலோ குறைந்துள்ளது. இந்த திடீர் எடை இழப்பு மருத்துவர்களுக்கு பெரும் கவலை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் இருந்தபோதும் ஜாமீனில் வெளியில் வந்தபோதும் அவரது உடல் எடையை அதிகரிக்க முடியவில்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்கு கீட்டோன் அளவு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இது சிறுநீரக பாதிப்பு அல்லது புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அவர் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரது தொடர் சிகிச்சைக்காக ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க மனு தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* முதல்வரின் நாடகம்: பாஜ தாக்கு
டெல்லி மாநில பாஜ தலைவர் விரேந்திர சச்தேவா கூறுகையில், ‘கெஜ்ரிவாலுக்கு அப்படி உடல்நிலை சரி இல்லை என்றால் தற்போது உடல் பரிசோதனை செய்யலாம். ஆனால் அவர் பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருக்கிறார். இது முதல்வரின் நாடகம்,’ என்று கூறினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது