2 மாத இடைவெளிக்கு பின் கனடா நாட்டினருக்கு இ- விசா வசதி: ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: 2 மாத இடைவெளிக்கு பின் கனடா நாட்டினருக்கு இ-விசா சேவையை வெளியுறவு அமைச்சகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங்கை தீவிரவாதிகள் பட்டியலில் ஒன்றிய அரசு சேர்த்திருந்தது. ஹர்தீப் சிங் கொலையில் ஒன்றிய உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுகளை மறுத்த ஒன்றிய அரசு அது முற்றிலும் ஆதாரமற்றது என கூறியது. அதை தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்த நாடு கூறியது.

அதற்கு பதிலடியாக, டெல்லியில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரி வெளியேறும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. மேலும் கனடா நாட்டினருக்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியது. கனடாவின் ஒட்டாவா, டொரன்டோ, வான்கோவர் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் விசா வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம், குறிப்பிட்ட பிரிவினருக்கான விசா சேவையை இந்தியா தொடங்கியது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பின் கனடா நாட்டினருக்கு மீண்டும் இ- விசா வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், இந்தியா செல்வதற்கான இ விசா வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான விவரங்களை டொரன்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள துணை தூதரகங்களின் இணையதளத்தில் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு