ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

ஜோதிட ரகசியங்கள்

பொதுவாகவே தனிநபர்கள் ஆரம்பித்து, நாடுகள் வரை கடன் வாங்குகின்றன. கடன் கொடுக்கக்கூடிய நாடும், வேறு ஒரு நாட்டிடம் கடன் வாங்கி இன்னொரு நாட்டுக்குக் கொடுப்பதையும் நாம் பார்க்கின்றோம். கடன் வாங்காமல் இருக்க முடியுமா என்றால் பெரும்பாலோருக்கு நடைமுறை சாத்தியமில்லை. கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் என்றாலும்கூட, அப்படிப்பட்ட வாழ்வு இன்றைய பொருளாதார உலகத்தில் சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, கடன் வாங்குவது என்பது குற்றமல்ல. கடன் வாங்குகின்ற பொழுது இரண்டு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாங்குகின்ற கடனை முறையாக பயன்படுத்த வேண்டும். அதனை அடைத்துவிட வேண்டும் என்கின்ற எண்ணம் பலமாக இருக்க வேண்டும். அந்தக் கடனை அடைப்பதற்கு உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.இப்பொழுது ஜாதக ரீதியாக இந்தக் கடன் பிரச்னை சிலருக்கு மிகஅதிகமாக ஏன் ஏற்படுகிறது? கடன் பிரச்னை இருந்தாலும்கூட சிலர் அதனை சமாளித்து வெற்றிகரமாக வாழ்கிறார்களே, அது எப்படி என்பதைப் பார்க்கலாம். பொதுவாக ஒருவருடைய ஆறாவது ராசி கடன் பிரச்னையைக் குறிப்பிடுகின்றது. கடன் பிரச்னை என்று சொன்னால் இரண்டு விதமாகவும் பார்க்கலாம். நாம் தர வேண்டிய கடன், நமக்கு வர வேண்டிய கடன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி இருந்தாலும், அது கடன் பிரச்னையைக் குறிக்கக்கூடிய ராசி. ஆறாவது ராசி என்பது ஒருவருடைய வேலைக்காரர்களையும் குறிப்பது. ஒருவருக்கு வருகின்ற நோயைக் குறிப்பது. ஒருவருக்கு இருக்கும் கடன் சுமையைக் குறிப்பது. ஒருவருக்கு வருகின்ற பகையைக் குறிப்பது. ஒரு ஆச்சரியமான விஷயத்தைப் பாருங்கள். இந்த மூன்றும் தனித்தனியாக இருந்தாலும்கூட ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பது. கடன் பிரச்னை இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்காது. நிம்மதி இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் இருக்காது. நோய் தானாக வந்துவிடும். அதைப் போலவே, கடன் பிரச்னை இருக்கக் கூடியவர்களுக்கு கேட்காமலேயே பகை வந்துவிடும். அதனால்தான் சில தேநீர்க் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள். கடன் அன்பை முறிக்கும்.

கடன் உறவை முறிக்கும். கடன் பகையை வளர்க்கும். எனவே, இங்கே கடன் கேட்காதீர்கள் என்று எழுதி இருப்பார்கள். எனவே, கடன் நோய் பகை என்பது ஒன்றுக் கொன்று இணைந்த பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருடைய ஆறாம் பாவம் எப்படி அமைந்திருக்கிறது. எந்தெந்த கிரகங்கள் அதை ஆளுகின்றன? எந்த கிரகத்தின் தசாபுக்தி நடந்துகொண்டிருக்கிறது? கோள்சாரம் சாதகமாக இருக்கிறதா என்பதை எல்லாம் கணக்கிட்டுத்தான் ஒருவர் கடன் பிரச்னையில் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஆறாம் பாவம், பத்தாம் பாவத்தோடு தொடர்புகொண்டால், அந்தக் கடனை அவர் தொழிலுக்கு முறையாக பயன்படுத்துவார். ஆறாம் பாவம் லக்கின பாவத்தோடு மட்டும் தொடர்பு கொண்டால், அதனை சொந்த செலவுக்கு பயன்படுத்துவார்.

ஆறாம் பாவம் 9, 11 ஆம் பாவத்தோடு தொடர்பு கொண்டால், கடன் வாங்கி தர்மம் செய்வார் அல்லது கடன் வாங்கி ஆடம்பரமாகச் செலவு செய்வார். ஒருவருடைய லக்கின பாவம் வலுப்பெற்று, ஆறாம் பாவம் வலுக்குன்றி இருந்தால், அவரால் கடன் பிரச்னையைச் சமாளிக்க முடியும். லக்கினம் வலுக் குறைந்து ஆறாம் பாவம் வலுத்துவிட்டால், அவர் எந்த நாளிலும் கடன் பிரச்னையிலிருந்து வெளியே வர முடியாது. உதாரணமாக, மேஷ லக்னம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமாகி அவரை சனி போன்ற கிரகங்கள் பார்க்க, ஆறாம் இடத்துக்குரிய புதன் ஆட்சி திரிகோண நிலையில் வலுப்பெற்றுவிட்டால், அவர் நிச்சயம் கடனாளியாகத்தான் இருப்பார்.

காரணம், இங்கே ஆறாம் பாவம் முழுமையான வலிமையோடும், லக்னபாவம் வலுக் குறைந்தும் இருக்கிறது. இதே போல், லக்னாதிபதி வலுப்பெற்று ஆறாம் பாவம் வலுக்குறைந்துவிட்டால், அவரால் வாங்கிய கடனை அடைத்துவிட முடியும். அவரை கடன் ஒன்றும் செய்யாது. இதற்கு உதாரணமாக, இரண்டு ஜாதகங்களைக் காட்ட முடியும். முதல் ஜாதகம், கும்ப லக்னம். 6க்கு உடைய சந்திரன் விருச்சிகத்தில் நீசம் ஆகிவிட்டார். எனவே ஆறாமாதி பலம் குறைந்து, லக்னாதிபதி லாபஸ்தானத்தில் குருவோடு இணைந்ததால், இவர் ஒரு சில அபூர்வ சந்தர்ப்பம் தவிர மற்றபடி தன் வாழ்நாளில் கடன் வாங்கியது இல்லை. கடன் கொடுத்திருக்கிறார். இரண்டாவதாக, 6ம் ஆதி திசையான சந்திரதிசை நடக்கும் போதுகூட, அவர் கடன் வாங்கவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இதற்கு மாறாக, இன்னொரு நண்பரின் ஜாதகம் பாருங்கள், சிம்ம லக்கனம் லக்னாதிபதி சூரியனே ஆறில் சென்று உச்ச செவ்வாயோடு இணைந்துவிட்டார். பாக்கிய அதிபதி உச்சம் பெற்று ஆறாம் இடத்தில் அமர்ந்து, ஆறாம் இடத்தின் வலிமையைக் கூட்டிவிட்டதால், எப்பொழுது பார்த்தாலும் கடன் கடன் கடன் என்று பஞ்சாயத்தில்தான் இருப்பார். விரய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு உச்சம் பெற்று வக்ரமடைந்து, கூடவே சந்திரனும் இணைந்த நிலை. 12ஆம் இடத்தில் ஆட்சிக் கிரகம் இருப்பது நல்லது தான் என்பார்கள். ஆனால், நடைமுறையில் இவர் எந்த தொழிலைச் செய்தாலும், அந்தத் தொழிலில் நஷ்டத்தோடுதான் வெளியே வருவார்.

பிறகு புதுத்தொழிலை ஆரம்பிப்பார். காரணம், 12ஆம் இடமான விரயஸ்தானம் பலம்பெற்று இருப்பதுதான். சரி இதற்கு என்ன தீர்வு என்று நினைக்கலாம். ஒரே ஒரு தீர்வுதான். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் கடன் வாங்கக் கூடாது. அப்படி வாங்கிய கடனை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கடனை அடைத்துவிட வேண்டும் என்பதை எப்பொழுதும் மனதில் வைராக்கியத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இவர்களிடம் இன்னொரு குணமும் இருக்கும். கடனைப் பற்றிய அலட்சியம் இருக்கும். என்ன, கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொள்வார்கள்.

இந்த நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும். நான் ஜோதிடத்தை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் பொழுது, இதைத்தான் வாடிக்கையாளரிடம் சொல்லுவேன். “கிரகங்கள் உங்களுக்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தும். அதனை புத்திசாலித்தனமாக கையாள்வதுடன், தப்பிப்பதிலும்தான் உங்களுடைய புத்தி செயல்பட வேண்டும்” என்பேன். உண்மையில் கடன் வாங்குவதை குறைப்பதன் மூலமும் இயன்றளவு தள்ளிப் போடுவதன் மூலமும், நாம் ஆறாம் பாவத்தின் பளுவைக்
குறைக்கலாம். அது நம் கையில்தான் இருக்கிறது.

பராசரன்

Related posts

வள்ளலார் ஆற்றிய அரும்பணிகள்

ஆத்ம தரிசனம் என்றால் என்ன?

ஸ்ரீசைலம்