Saturday, September 14, 2024
Home » ? பெண்கள் ஆஞ்சநேயரை பூஜை செய்யலாமா? கூடாதா?

? பெண்கள் ஆஞ்சநேயரை பூஜை செய்யலாமா? கூடாதா?

by Lavanya

ஆஞ்சநேயர், தெய்வீக சக்தி வாய்ந்தவர். அவரையும் கடவுளர்களில்ஒருவராக எண்ணி வழிபடுகிறோம். இதில் ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? ஆஞ்சநேயர், ஐயப்பன் முதலான இறைசக்திகள் பிரம்மச்சரிய விரதம் கொண்டவர்கள், இவர்களை பெண்கள் வழிபடக்கூடாது என்ற கருத்தினை ஏற்பதற்கில்லை. சபரிமலை தவிர்த்து இதர ஐயப்பன்ஆலயங்களுக்கு பெண்கள் சென்று வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சபரிமலையில் கூட மாத விலக்கு நின்ற பெண்களை அனுமதிக்கிறார்கள். இறைசக்திகளின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பின்னால் பல ஆன்மிக ரகசியங்கள் அடங்கியுள்ளன. பெண்கள் இந்த சக்திகளை பூஜிப்பதாலும், அவர்களை வழிபடுவதாலும் இறைசக்திகளின் விரதம் ஒருபோதும் களங்கம் அடையாது. பொதுவாக ஆஞ்சநேயர் மன உறுதியைத் தரவல்லவர் என்பது ஆன்மிகவாதி களின் கருத்து.

பெரும்பாலான பெண்கள் மனதளவில் அடிக்கடி பயமும், மன உறுதி குறைபவர்களாக இருப்பதால், அவர்களது சஞ்சலத்தைப் போக்கி மன உறுதியைத் தரவேண்டி அவர்கள்தான் அதிகமாக ஆஞ்சநேயரைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்! சீதாப்பிராட்டி மனதளவில் பெருந்துயரம் கொண்டிருந்தபோது, அவரது துயரத்தைப் போக்கியவர் ஆஞ்சநேயர்தான், அல்லவா? ஆஞ்சநேயர், பரமேஸ்வரனின் அம்சம் என்ற கருத்தும் ஆன்மிகவாதிகளின் மத்தியில் நிலவுகிறது. பொதுவாக பலசாலியாக இருப்பவன் அறிவாளியாக இருப்பதில்லை, அறிவாளியாக இருப்பவர் உடல்வலிமை குன்றியவனாக இருப்பான், ஆனால், உடல் வலிமையும், புத்திக்கூர்மையும் ஒருங்கே இணையப்பெற்ற இந்த அற்புதமான இறைசக்தியை பெண்கள் பூஜிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆஞ்சநேயரை வழிபடும் பெண்கள் புத்திசாலிகள் ஆகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

? எட்டாவது ராசி ஆண், ஆறாவது ராசி பெண்ணையும், ஆறாவது ராசி ஆண், எட்டாவது ராசி பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

– நா.ஜெயராமன், கல்லிடைக்குறிச்சி.
இதனை ஜோதிடர்கள் ‘ஷஷ்டாஷ்டகம்’ என்பார்கள். அதாவது, திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் ராசி முதல் ஆணின் ராசி வரை எண்ணும்போது ஆணின் ராசி ஆறாவதாகவும், ஆணின் ராசியிலிருந்து பெண்ணின் ராசி எட்டாவதாகவும் வந்தால் அதனை ‘ஷஷ்டாஷ்டகம்’ என்றும் இருவரும் சதா சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்கும் உண்டு. மணமகன் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய பெண் ராசிகளில் பிறந்து, மணமகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய புருஷ ராசிகளில் பிறந்திருந்தால் இதனை ‘அனுகூல ஷஷ்டாஷ்டகம்’, அதாவது, ‘ஷஷ்டாஷ்டக தோஷ நிவர்த்தி’, விவாஹம் செய்யலாம் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதே போன்று ராசி அதிபதி ஒருவனே ஆகில் தோஷம் கிடையாது என்பதும் மற்றொரு விதி ஆகும். இந்த விதியின் படி மேஷம்-விருச்சிகம், ரிஷபம்-துலாம் ஆகிய இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஷஷ்டாஷ்டக தோஷம் என்பது கிடையாது. ராசி அதிபதிகள் நட்புறவுடன் இருந்தாலும் இந்த தோஷம் அண்டாது. பொதுவான விதியை மட்டும் கருத்தில் கொள்ளாது, அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் மணமக்களின் ஜாதகங்களைக் காண்பித்து தீர்மானிப்பதே நல்லது.

? சிராத்தத்தில் (வருடந்தோறும் மேற்கொள்ள வேண்டிய நீத்தார் கடன்) சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பொருள்கள் என்ன?

– திலீபன், மதுரை.
1. பசும்பால், 2. கங்கா ஜலம், 3. தேன், 4. வெண்பட்டு, 5. புத்துருக்கு நெய்,
6. கருப்பு எள்.
இந்த பொருட்கள் சிராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்துச் செய்வது நிறைவான பலனைத் தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம் என்கிறார்கள்.

? கிருஷ்ணாரண்யம் போல பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் உண்டா?

– சிவபிரகாசம், சென்னை.
உண்டு. திருவாரூரைச் சுற்றி உள்ள தலங்கள் சிலவற்றை பஞ்ச ராம
க்ஷேத்ரங்கள் என்கிறார்கள்.
1. தில்லை விளாகம் – வீர கோதண்டராமர்,
2. வடுவூர் – கோதண்டராமர்
3. பருத்தியூர் – கோதண்டராமர்
4. முடிகொண்டான் – கோதண்டராமர்
5. அதம்பார் – கோதண்டராமர்.
ராமநவமி அன்று இந்தத் தலங்களை சென்று சேவிக்கலாம்.

? கோயில் சிற்பங்களில் கூட ஆண் பெண் அந்தரங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதன் நோக்கம் என்ன?

– முருகன்.
ஆண் – பெண் சேர்க்கை என்பது இயற்கையின் நியதி. தாம்பத்யம் என்பது மிகவும் புனிதமானது. மிகவும் புனிதமான ஒரு விஷயத்தை பொதுமக்கள் கூடுகின்ற ஆலயத்தில் சிற்பங்களாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். பக்தி சிரத்தையோடு இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இந்தச் சிற்பங்கள் பாடத்தினைப் போதிப்பவையாகத்தான் அமையுமே தவிர, பாலியல் உணர்வினை நிச்சயம் தூண்டாது. நவீன யுகத்தில் கலவியை (பாலியல் கல்வி) கல்வியின் மூலம் போதிக்கிறார்கள். அந்நாட்களில் பாடசாலைக்குப் பிள்ளைகள் வருவதே அபூர்வம். குறிப்பிட்ட குடிகளில் பிறந்தவர்கள் மட்டுமே பாடம் படித்தார்கள். மற்றவர்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? ஆலயம் தவிர பிற இடங்களில் வைத்து கற்றுத்தந்தால் கல்லாத மூடர்களின் உணர்வினைக்கட்டுப்படுத்த இயலாது. இதனை உணர்ந்துதான் கற்றவர், கல்லாதவர் என்ற பேதம் ஏதுமின்றி எல்லோரும் புனிதமான தாம்பத்ய உறவினைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சிற்பங்களை ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் வடிவமைத்தார்கள். இறைவனின் சந்நதியில் அறிவுதான் வளருமே தவிர, உணர்வு என்பது
தூண்டப்படாது என்பதே நிஜம்.

?ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமா?

– சுந்தர பெருமாள், வில்லிவாக்கம்.
ஆடிமாதத்தில் எந்தவிதமான சுப நிகழ்ச்சியும் செய்யக் கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆடி மாதத்தில் குலதெய்வத்தின் கோயிலுக்குக் குடும்பத்துடன் செல்லும் பழக்கத்தினை உடையவர்கள் சுபநிகழ்ச்சியினைத் தவிர்த்தனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியரை பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தைத் தவிர்த்தனர். அதேநேரத்தில் வீடு கிரஹபிரவேசம், வீடு குடி போதல், புதிய வீடு, நிலம் வாங்குதல், திருமண நிச்சயதார்த்தம், வளைகாப்பு சீமந்தம் செய்தல் முதலானவற்றை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால் தாராளமாக வீடு குடி போகலாம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே வீடு குடிபோவதைத் தவிர்க்க வேண்டும் என்றுரைக்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆடி மாதத்தில் தாராளமாக சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம்.

திருக்கோவிலூர் KB ஹரிபிரசாத் சர்மா

You may also like

Leave a Comment

1 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi