டயபர்கள் பயன்படுத்தலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார் குழலி

எழுந்து நடக்க முடியாமல், நீண்ட கால படுக்கை நோயாளிகள் இருந்தாலே, அவர்களுக்கான முக்கிய பணிவிடையில் ஒன்றாக இருப்பது அவரின் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிதான். அதில் பல சிரமங்களையும் சகிப்புத் தன்மையுடன் கடந்து வரவேண்டும் என்றிருந்த நிலையை மாற்றியது என்னவோ, பயன்படுத்தித் தூக்கி எறியும் (disposable) டயபர்கள்.

டயபர்களின் மூலப்பொருட்கள்

பொதுவாக டயபர்கள், உடலின் தோலுடன் ஒட்டியிருக்கும் மேலடுக்கு, ஈரத்தை இழுத்து வைத்திருக்கும் நடு அடுக்கு (பாலிமர் மற்றும் ஜெல்), ஈரத்தை வெளியில் விடாமல் வைத்திருக்கும் கடைசி அடுக்கு என்று உருவாக்கப்படுகின்றன. இவற்றுடன் சேர்ந்து, மரக்கூழ், நெய்யப்படாத துணி இழைகள், கோந்து, பருத்தி, பாலிஸ்டர், மூங்கில், மெல்லிழைத்தாள், ஜெல் போன்ற திரவம் (emollients), பாலிஎத்திலின் அல்லது பாலிபுரோபைலின் மெல்லிழைகள் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது, தயாரிக்கப்படும் டயபர்கள்

உடனுக்குடன் ஈரமாவதைக் கண்டறியும் வகையில் நானோ தொழில்நுட்பத்துடன், சென்சார் வைத்துத் தயாரிக்கப்படுகின்றன. சூப்பர் அப்சார்பிங் பாலிமர் (SAP) என்னும் சோடியம் பாலிஅக்ரைலேட் மற்றும் பாலிபுரோபைலின் என்னும் பொருட்கள் கொண்டு செய்யப்படுவதால், சிறுநீர் மற்றும் மலம் உறிஞ்சிக்கொண்டு, வெளிப்புறத்திலுள்ள அடுக்கு ஈரமாகாமலும், நனைந்து சங்கடம் தராமலும் பாதுகாக்கிறது.

ஏறக்குறைய 1 லிட்டர் கழிவு வரையில் தாங்கி வைத்திருக்கக்கூடிய அளவில்தான் டயபர்கள் தயாரிக்கப்படுகின்றன. 50 – 60 மி.லி சிறுநீர் தேங்குமளவிற்கு இருப்பது குழந்தைகளின் டயபர்கள். அதுவே சானிடரி நாப்கின்களாக இருப்பின், 5 – 15 மி.லி உதிரம் வரையில் தேக்கி வைத்திருக்கும். எனவே, இந்த மூன்று பொருட்களில், அதிக அளவில் கழிவுகளை தேக்கி வைத்திருக்கும் பணி பெரியவர்கள் பயன்படுத்தும் டயபர்களில்தான் இருக்கிறது என்றும் கூறலாம்.

டயபர்கள் யாருக்கெல்லாம் பயன்படுகின்றன?

முதலில் சிறுகுழந்தைகளுக்காகவே தயாரிக்கப்பட்ட டயபர்கள், பெரியவர்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. வயதானவர்களில், அல்ஜீமர், பார்கின்சன் நோய், தண்டுவட நோய்கள் போன்றவைகள் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும்போதும் டயபர்கள் அணிவிக்கப்படுகிறது. தசைகட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர்கள், விபத்து, எலும்பு முறிவு, எழுந்து நடக்க இயலாமல் இருப்பவர்கள், தீவிர நோய்ச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள், மனநலபாதிப்பு, வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் தொடர்ச்சியாக டயபர்களை அணிகிறார்கள்.

டயபர்கள் சூழலுக்கு உகந்தவையா?

பாலிபுரோபைலின் மூலப்பொருளில் தயாரிக்கப்பட்ட டயபர்கள் மண்ணுடன் சேர்ந்து மட்கிப் போவதற்கு சுமார் 500 ஆண்டுகள் ஆகுமென்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேவேளையில், தாவரப்பொருட்களை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் டயபர்கள் மட்குவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வதில்லை என்று விளம்பரங்கள் வழியாகக் கூறப்படுகிறது. ஆனால், அவையுமே, 50 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்ளும் என்பதைத்தான் மக்கள் தெரிந்துகொள்வதில்லை.

வியாபார நிறுவனங்கள் தெரிவிப்பதுமில்லை. இந்த 50 ஆண்டுகள் என்பதே மிக மிக அதிகம்தான். அதுவரையில் அப்பொருள் மட்காமல், சூழல் கேடுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும். காரணம், சூழலுக்கு உகந்த அல்லது எளிதில் மட்கும் என்ற வார்த்தைகளை சேர்ப்பதற்காகவே சிறு அளவில் தாவரப் பொருட்களை சேர்த்தாலும், அவற்றை விட அதிகம் சேர்க்கப்படுவது என்னவோ, மட்காத பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்தான். இது நிச்சயம் நுகர்வோருக்குத் தெரிவதற்கு வாய்ப்புகள் இல்லை.

இதுபோன்ற நுண்ணிய பிளாஸ்டிக் இழைகள் மற்றும் பொருட்களால் உருவாக்கப்படும் டயபர்கள், அவற்றின் இறுதி சுழற்சி வரையில், அவை இருக்கும் அல்லது அப்புறப்படுத்தப்படும் அந்தந்த இடத்தின் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிக்கை (2021) கூறியிருக்கிறது.

ஒரு வருடத்திற்குத் தேவையான டயபர்களைத் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 82,000 டன் பிளாஸ்டிக் மற்றும் 2,50,000 மரங்கள் தேவைப்படுகின்றன என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, சூழலுக்கு உகந்த வகையில் அப்புறப்படுத்தும் வசதியுடைய டயபர்களின் தேவை இருப்பதால், கரும்பு சக்கை, சோளம், பருத்தி, மூங்கில் நார் போன்றவையும் “Eco friendly” டயபர் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மூங்கிலிலிருந்து தயாரிக்கப்படும் டயபர்கள் 12 மாதங்களில் மட்கும் தன்மையுடையவையாக இருப்பதால், சூழலுக்கு உகந்தவை என்று விற்பனைக்கு வந்துள்ளன. என்றாலும், அவற்றின் உற்பத்தி செலவு, மூங்கில் இறக்குமதி, பயன்படுத்தும் பிற மூலப்பொருட்களின் தரம், பின்பற்றும் விதிமுறைகளின் நம்பகத்தன்மை போன்றவை இன்றளவிலும் பலரால் பரவலாக அறியப்படாமல் இருக்கிறது. இவ்வகை டயபர்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை. பிற டயபர்களைவிட விலையும் கூடுதல் என்பதால், எந்த அளவிற்கு அனைத்துத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தமுடியும் என்று கூறவும் முடியாது.

அச்சுறுத்தும் டயபர் கழிவுகள்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் டயபர்கள் மட்டும் ஒரு நாளைக்கு 548 டன்கள் வீதம் ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் டன்கள் கழிவுகளாக உருவாகின்றன. உலகில் உருவாகும் மொத்த திடக்கழிவில் 1.5 சதவிகிதம் டயபர் கழிவுகளாக இருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து, வருடத்திற்கு 12 பில்லியன் நாப்கின்களும் கழிவுகளாக வெளியேறுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பின், திடக்கழிவு மேலாண்மை அறிக்கை கூறுகிறது. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், இப்பொருட்கள் மட்குவதில்லை என்பதாலும், மறுசுழற்சிக்கும் உட்படுவதில்லை என்பதாலும், உற்பத்தி செய்யப்படும் எண்ணிக்கையும், கழிவாகும் எண்ணிக்கையும் சம அளவில்தான் இருக்கிறது.

டயபர்களால் நோய் பரவும் ஆபத்து

பொதுவாகவே, மலத்தில், இ.கோலை, ஷிஜல்லா, சல்மோனல்லா போன்ற பாக்டீரியா வகைகள் அதிகம் இருக்கும். ஒருவேளை நோயாளிக்கு கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, போலியோ, காலரா போன்ற நோய்கள் இருப்பின், அவர்கள் பயன்படுத்தி தூக்கி எறியும் டயர்பர்களிலுள்ள மலத்தில் அந்நோயைப் பரப்பும் வைரஸ்களும் சேர்ந்தேதான் இருக்கும். இவை நீர்நிலைகளில் தேங்கும் பட்சத்தில், வெளியில் கசிந்தால், அதன்வழியாக நோய் பரவும் பேராபத்தும் இருக்கின்றது என்பதை டயபர்களைப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் நினைத்துப்பார்ப்பதில்லை. மனித மலம் முழுவதும் மட்கும் தன்மையுடையது. திறந்தவெளியில் கழிக்கப்படும் மலம், முழுவதுமாக மண்ணோடு மண்ணாக மட்கிப்போவதற்கு சுமார் 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற நிலையில், காற்று புகாதவாறு மூடப்படும் மலம் எவ்வாறு மட்கும்?

100 சதவிகிதம் மட்கும் தன்மையுள்ள மலம் மற்றும் சிறுநீர் மட்குவதற்கு 500 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் ஒரு வேதிப்பொருளுக்குள் வைத்து காற்று புகாதவண்ணம் அடைத்து வைத்துத் தூக்கி எறிவது என்பது எவ்வகையில் நியாயம்? அனைத்து வகையிலும் முரணாகத் தெரியவில்லையா?

டயபர்களுக்கான விதிமுறைகள்

டயபர்களை விற்பனை செய்யும்போது, அதை எவ்வாறு பாதுகாப்பது, உபயோகப்படுத்துவது, அப்புறப்படுத்துவது என்பது குறித்த விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2016ன்படி, பயன்படுத்திய டயபர்கள் மற்றும் சானிடரி நாப்கின்களை அதற்கேற்ற உறைக்குள் நன்றாக சுருட்டி, அவ்வூரின் நகர பஞ்சாயத்து மூலமாக வைக்கப்பட்டிருக்கும் மட்காத கழிவுகள் கொட்டும் பைகளில் அல்லது அதற்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் (விதி 4 (b), 15 (zg) (iv) & (vi) மற்றும் 17).

மற்றொருபுறம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை – தேசிய வழிகாட்டுதல்கள் (டிசம்பர் 2015) கூறுவது என்னவென்றால், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை, மனிதத் தொடர்பு இல்லாதவாறு, சூழலுக்குக் கேடு விளைவிக்காதவாறு அப்புறப்படுத்த வேண்டும். பாதுகாப்பில்லாமல் நீர்நிலைகளில், விவசாய நிலங்களில் தூக்கி எறியக்கூடாது என்பதாகும்.

இவற்றையெல்லாம் இப்போது யார் பின்பற்றுகிறார்கள்? குழந்தைக்கு அணிவித்த டயபரைக் கழற்றுவதற்குக் கூட சகிப்புத் தன்மையும், பொறுமையும், பொறுப்பும் இல்லாமல், அப்படியே உருவி, வீதி முனைகளில், தெருவோரங்களில், வாய்க்கால்களில் தூக்கி எறியும் அவல நிலையை தினம் தினம் நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அப்புறப்படுத்துவதிலும் அலட்சியம்

பயன்படுத்துவதற்கு முன்னர் சுகாதாரத்தைப் பார்க்கும் அதே நபர், பயன்படுத்திய பிறகும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதற்கும் கவனம் செலுத்துவதுதானே சமூக அறம்? அதே வேளையில், பல கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வைக்கப்பட்டிருக்கும் incinerators களும், குறைந்த விலையில் தரமில்லாமல் இருப்பதால், அவை முழுவதும் பாதுகாப்பாக இருப்பதில்லை. அவற்றிலிருந்து வெளிவரும் புகையும் துர்நாற்றமும், அங்கிருப்பவர்களின் உடல் நலனுக்கும், சுற்றுப்புறத்திற்கும் சீர்கேட்டையே விளைவிப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாடு அமைப்பும் கூறுகிறது.

வெட்டவெளியில் தீவைத்து எரித்துவிடுவதால், அதிலிருந்து வெளிவரும் புகையில் கலந்திருக்கும் டயாக்ஸின் மற்றும் ஃபுரான் வாயுக்கள் உடலுக்கு ஆபத்தான புற்றுநோய்க்காரணிகளை வரவழைத்துவிடும் நிலையும் ஏற்படுகிறது என்று எச்சரிக்கப்படுகிறது.

உபயோகித்த டயபர்களை மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் எரியூட்டி சாம்பலாக்கும் கருவிகள் மூலம் (Incinerator) அப்புறப்படுத்துகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள், நகர பஞ்சாயத்துக்களால் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய எரியூட்டிகளைக் கொண்டு சாம்பலாக்குகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் பொதுமக்கள் தூக்கி எறியும் டயபர்கள், இந்த வசதி இல்லாத தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இக்கழிவுகளை அப்படியே வேறோர் இடத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்றன.

இதற்கான தீர்வு என்ன?

மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களும், நகர பஞ்சாயத்துக்களும் எவ்வகையில் வழிகாட்டுதல்களைக் கொடுத்தாலும், எதையும் காதில் வாங்குவதில்லை. நாங்கள் செய்வதைத்தான் செய்வோம் என்று பயன்படுத்திய டயபர்களை மலத்துடனும், சேனிடரி நாப்கின்களை உதிரத்துடனும் பொதுவெளியில் தூக்கி எறியும் மக்கள் இருக்கும் வரையில், நிச்சயம் இதற்குத் தீர்வே கிடைக்காது.

சானிடரி நாப்கின் உபயோகிக்கும் ஒவ்வொரு பெண்ணும், சிறு குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் ஒவ்வொரு பெற்றோரும், நோயாளிக்கு டயபர் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினரும், அண்டை வீட்டாருக்கும், தெரு மக்களுக்கும், வீதியில் நடப்போருக்கும், பொதுவெளி, நீர்நிலை உள்ளிட்ட சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும். அப்போது இச்சிக்கல் ஒரு குறிப்பிட்ட அளவில் குறையலாம்.

சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்படும் பருத்தியிலான டயபர்கள், விலை குறைவு என்பதுடன், கழிவுகளின் அளவும் கணிசமாகக் குறையும் என்பதில் ஐயமில்லை. இனிவரும் காலங்களில், டயபர் கழிவுகளைக் குறைத்தும், சேரும் கழிவுகளை முறையாக அப்புறப்புறப்படுத்தியும் இந்நிலையைச் சரிசெய்ய வேண்டும். அதற்கு, நமக்கு நாமே மாறிக்கொள்வதும், இச்சிக்கலை அவசரநிலையாகக் கருதி, அரசு முழுவீச்சில் திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டங்களை இன்னும் தீவிரமாக மக்களிடம் சேர்ப்பதும் தற்போது மிக அவசியமானது. இயலாதவர்களின் உடல்நிலைக்கு பல வகையில் சாதகமாக இருக்கும் டயபர்கள், சூழலுக்குப் பாதகமாக அமையாமல் பார்த்துக்கொள்வது நமது கடமையாகும்.

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!