7 இடங்களில் வெற்றி பெற்றும் ஒரு இணை அமைச்சர் தானா? கேபினட் அமைச்சர் பதவி கேட்டு சிவசேனா திடீர் போர்க்கொடி: பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு

புனே: தங்கள் கட்சிக்கு கேபினட் அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் சிவசேனா போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதியில் பாஜ 9, ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என கோரிவரும் அஜித்பவார் கட்சி இணைஅமைச்சர் பதவியை ஏற்க மறுத்தது. இந்த நிலையில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ஒரு இணை அமைச்சர் பதவி மட்டும் தரப்பட்டது. அந்த கட்சியின் பிரதாப்ராவ் ஜாதவ் இணையமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி தூக்கி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் எம்.பி ஸ்ரீரங்பார்னே புனேயில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்துக்கு அடுத்த படி சிவசேனாவுக்குத்தான் அதிக எம்.பி.க்கள் உள்ளனர். எங்களுக்கு 7 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஒரு இணை அமைச்சர் பதவியும் எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு இணை அமைச்சர் பதவிதான் தரப்பட்டுள்ளது. ஒரு கேபினட் பதவியை பெற நாங்கள் தகுதியுள்ளவர்கள். அமைச்சர் பதவி வழங்குவதில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டியுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி கட்சிக்கு இரண்டு எம்.பி.க்கள் தான் உள்ளனர். ஆனால் ஒரு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஜித்தன் ராம் மஞ்சி மட்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் கேபினட் பதவி வழங்கப்பட்டுள்ளது. 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற சிராக் பஸ்வான் கட்சிக்கும் கேபினட் பதவி தரப்பட்டுள்ளது. இவ்வாறு பார்னே தெரிவித்தரார். ஆனால், நாங்கள் எந்த பதவியும் கேட்கவில்லை என்று முதல்வர் ஷிண்டேயின் மகனும், சிவசேனா கட்சியின் பாராளுமன்ற தலைவருமான காந்த் ஷிண்டே தெரிவித்தார்.

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு