முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது: புதிய தொழில் முதலீடு குறித்து முக்கிய முடிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடு, கவர்னர் உரை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கும். ஆனால் இந்தாண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வந்தது.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் கவர்னர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வருகிற 28ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அவர் பிப்ரவரி 2வது வாரம்தான் சென்னை திரும்புகிறார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை வருகிற பிப்ரவரி 2வது வார இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசின் 2024-2025க்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். கவர்னர் உரையில், இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வெளிநாட்டில் சில தொழில் நிறுவனங்களுடன் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த நிறுவனங்கள் குறித்தும் அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மாநில மகளிர் கொள்கை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

* ‘மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல்’

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கை என்ற ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதை முதல்வர் வெளியிடுவார். பெண்களுக்கான தேசிய கொள்கை முடிவு 2001ல் வெளியிடப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த 2021 டிசம்பரில் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இன்று, ஒட்டுமொத்த பெண்களுக்கான வளர்ச்சி என்கிற முறையில், அவர்களுக்கு அதிகாரம் அளித்தல், விழிப்புணர்வு கொண்டு வருவது, உள்ளாட்சி பணியில் உள்ள பெண்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி, பெண் தொழிலதிபர்களுக்கு நிதி மேலாண்மை, நிர்வாகம், தொழிலில் லாபம் ஈட்டுவது பற்றிய பயிற்சி, வணிக குறியீடு கடன் வழங்குவது, மானியம் வழங்குவது, விவசாயிகளுகளுக்கு சமமான ஊதியம் உள்ளிட்டவைகள் இதில் முக்கியமாக இடம்பெறும். ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, விழிப்புணர்வு, வளர்ச்சி குறித்த பெண்களுக்கான கொள்கை முடிவை முதல்வர் விரைவில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு