எதிர்பார்த்த விலை கிடைக்காததால் முட்டைகோஸ் அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்

ஊட்டி : முட்டைகோசிற்கு போதுமான விலை கிடைக்காத நிலையில் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட்,உருளைக்கிழங்கு,பீட்ரூட்,முட்டைகோஸ் மற்றும் பூண்டு ஆகியவை அதிக அளவு பயிரிடப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுவாக நீலகிரியில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு எப்போதும் ஓரளவு விலை கிடைக்கும்.ஒரு சில சமயங்களில் மட்டுமே விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.கேரட் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளுக்கு எப்போதும் சீரான விலை கிடைக்கும்.

ஆனால்,தற்போது இவை இரண்டிற்கும் போதிய அளவு விலை கிடைப்பதில்லை.குறிப்பாக முட்டைகோசிற்கு அடிக்கடி போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றனர்.தற்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிக அளவு முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.மேலும், இவைகள் அறுவடைக்கும் தயார் நிலையில் உள்ளன.ஆனால் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டி மற்றும் ஊட்டியில் உள்ள காய்கறி மண்டிகளில் முட்டைகோசிற்கு போதுமான விலை கிடைப்பதில்லை. தற்போது கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையே கிடைக்கிறது.

இதனை அறுவடை செய்து லாரிகள் மூலம் கொண்டு சென்றால் போட்ட முதலீடு கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் தற்போது அறுவடை செய்வதையே தாமதித்து வருகின்றனர்.பெரும்பாலான விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக முட்டைகோஸ் உள்ள போதிலும், விலை கிடைக்காததால் விவசாயிகள் அறுவடை செய்வதை நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தங்களது விவசாய நிலங்களில் உள்ள முட்டைகோஸ் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்