சிஏஏ சட்டத்திற்கு எதிரான வழக்கு வரும் 19ம் தேதி விசாரிக்கப்படும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: சிஏஏ சட்டத்திற்கு எதிரான வழக்கு வரும் 19ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியோர் தரப்பில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டும் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதுபோன்ற சூழலில் ஒன்றிய அரசு குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தில் மாவட்ட ரீதியான அதிகாரம் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளதால், அதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கு தடை விதித்து, அதனை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வின் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி விட்டால், அதுதொடர்பான மனுக்களை விசாரிக்க சிக்கல் ஏற்படும். எனவே இந்த வழக்குகள் அனைத்தையும் உடனடியாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது