7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் 10 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி: 2 தொகுதிகள் மட்டுமே பா.ஜவுக்கு கிடைத்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களிலும், பாஜ 2, சுயேச்சை 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்ல் முடிவு, நாட்டில் மாறிவரும் அரசியல் சூழலை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் கூறி உள்ளது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி உட்பட மேற்கு வங்கம் (4 தொகுதிகள்), இமாச்சல பிரதேசம் (3), உத்தரகாண்ட் (2), பஞ்சாப் (1), மத்தியபிரதேசம் (1), பீகார் (1) ஆகிய 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜவை எதிர்த்து போட்டியிட்டன.

மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் நடக்கும் தேர்தல் என்பதால் இதன் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட மொகிந்தர் பகத் 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் ஷீத்தல் அங்குரலை வென்றார். ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த அங்குரல், கடந்த மார்ச் மாதம் பதவியை ராஜினாமா செய்து பாஜவில் இணைந்ததை அடுத்து அந்த இடம்

காலியானது. தற்போது அதே தொகுதியில் அங்குரலை வீழ்த்தியிருப்பது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‘‘இது பஞ்சாப் மக்கள் எங்கள் அரசின் செயல்பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டுகிறது’’ என்றார். மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவை தோற்கடித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் டெஹ்ரா சட்டப்பேரவை தொகுதியில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவியும், காங்கிரஸ் வேட்பாளருமான கமலேஷ் தாக்கூர் 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் ஹோஷியார் சிங்கை தோற்கடித்தார். நலகர் தொகுதியில் காங்கிரசின் ஹர்தீப் சிங் பாவா 8,990 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் கே.எல்.தாக்கூரை வென்றார். அதே சமயம், ஹமிர்பூர் தொகுதியில் பாஜ வேட்பாளர் ஆஷிஷ் ஷர்மாவிவிடம் 1,571 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசின் புஷ்பிந்தர் வர்மா தோல்வி அடைந்தார்.

உத்தரகாண்டில், பத்ரிநாத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பாஜவின் ராஜேந்திர சிங் பண்டாரியை 5,224 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் லகபத் சிங் புடோலா தோற்கடித்தார். நிஜாமுதீன் தொகுதியில் பாஜகவின் கர்தார் சிங் பதானாவை 422 வாக்குகள் வித்தியாசத்தில் காசி முகமது நிஜாமுதீன் தோற்கடித்தார். மபியில் அமர்வாரா தொகுதியில் பாஜவின் கம்லேஷ் பிரதாப் ஷா 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் தீரன் சா இன்வதியை வென்றார். பீகாரில் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த கலாதர் பிரசாத் மண்டலை வென்றார்.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சாதனை வெற்றி பெற்றுள்ளார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்