மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 12 இடங்களுக்கு இடைத்தேர்தல்; பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறுகிறதா?: 4 மாநில பேரவை தேர்தலுக்கு முன் அரசியல் பரபரப்பு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 12 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெற வாயப்புள்ளது. 4 மாநில பேரவை தேர்தலுக்கு முன் இடைத்தேர்தல் நடப்பதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்கு பிஜு ஜனதா தளம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்பி மமதா மொகந்தா கடந்த மாதம் 31ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார். அதேபோல் தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி எம்பி கேசவ் ராவ் என்பவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். மேற்கண்ட இருவருடன் சேர்த்து 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட சிட்டிங் எம்பிக்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் 10 எம்பி பதவிகள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப வரும் செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 14ம் தேதி வெளியிடப்படுகிறது. மனுக்கள் வரும் 22ம் தேதி ஆய்வு செய்யப்படும். தேர்தல் செப்டம்பர் 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்படும்.

ஓட்டு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 12 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அனைத்துக் கட்சிகளும் தங்களைப் பலப்படுத்தத் தயாராகி வருகின்றன. மொத்தமுள்ள 12 இடங்களில், 10 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 97 ஆகக் கொண்டு உயரக்கூடும். அசாமில் இரண்டு இடங்களும் காலியாகிவிட்டதால், அந்த இரு இடங்களையும் பாஜகவே கைப்பற்றும். பீகாரில் ஆர்ஜேடி மற்றும் பாஜகவின் தலா ஒரு இடம் காலியாக உள்ளது. மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி இருப்பதால், இரு தொகுதிகளும் அக்கட்சிக்கே செல்லும். அரியானாவில் காங்கிரசுக்கு ஒரு இடம் காலியாகிவிட்டது. ஆனால் மாநிலத்தில் பாஜக ஆட்சி இருப்பதால், அங்கும் பாஜக கைப்பற்றும். மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் காலியாகிவிட்டதால், அது ஆளும் பாஜகவிடம் இருக்கும். மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு இரண்டு இடங்கள் காலியாகிவிட்ட நிலையில், பாஜக கூட்டணிக்கே செல்லும். ராஜஸ்தானில் காங்கிரசின் ஒரு இடம் காலியான நிலையில், அதுவும் ஆளும் பாஜகவுக்குச் செல்லும். திரிபுராவில் ஒரு இடம் காலியாகிவிட்டது.

ஆளும் பாஜகவுக்கே கிடைக்கும். ஒடிசாவிலும் காலியாக உள்ள பிஜேடி தொகுதி பாஜக வசம் செல்ல வாய்ப்புள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 237 இடங்களில் பெரும்பான்மை பலத்திற்கு 119 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் பாஜகவுக்கு 10 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த எண்ணிக்கை 112 ஆக உயர வாய்ப்புள்ளது. இருந்தாலும் பெரும்பான்மை பலம் பாஜக கூட்டணிக்கு கிடைக்காத நிலை உள்ளதால், 6 நியமன உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சுயேச்சை உறுப்பினர்களுடன் சேர்த்து 120 ஆக உயர வாய்ப்புள்ளது. எனவே 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான தேர்தல் மூலம் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஜம்மு – காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

வழக்கறிஞர் சங்க தேர்தல்: காவல்துறைக்கு ஐகோர்ட் பாராட்டு

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டிஐஜி உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

திருவிடைமருதூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம்