வாங்க ஜூஸ் குடிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

ஜூஸ் என்றாலே பழங்கள் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஒரு சில காய்கறிகளையும் நாம் ஜூஸாக அருந்தலாம். அவை நம் உடலுக்கு பல விதமான நன்மைகளைத் தரக்கூடியது.

முள்ளங்கி: முள்ளங்கி சாம்பார் மற்றும் பொரியல் செய்யவும் மட்டும்தான் பயன்படுத்தப்படுகின்றது. காரத்தன்மையும், உப்புத் தன்மையும் நிறைந்த முள்ளங்கியை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான காரச் சத்துகளும் உப்புச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நீர் விட்டு அரைத்து வடிகட்டி, அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கால் மணி நேரம் கழித்து பருகலாம். வயிற்றை சுத்தம் செய்யும். வயிற்றுப் பகுதியில் திரண்டுள்ள கொழுப்பை கரைக்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும். எலும்புகள் உறுதிப்படும். செரிமான பிரச்னையை நீக்கும். முள்ளங்கியில் நுண் தாதுக்களும், உப்புகளும் நிரம்பியுள்ளதால் குடிக்க துவங்கும்போது வாரத்தில் 2 நாள் வீதமும் பிறகு வாரத்திற்கு 1 முறை என்று பருகலாம்.

புடலங்காய்: புடலங்காயினை துருவிக் கையால் பிழிந்தாலே சாறு வரும். இதனை குளிர்காலம் தவிர மற்ற காலங்களில் பருகலாம். நல்ல செரிமானத் திறனையும், தாதுச் சத்துகளையும், உப்புச் சத்துக்களையும் அளிக்கக்கூடியது. கண் பார்வை பளிச்சென்று தெரியும், சிறுநீரகத்தின் ஆற்றலை அதிகரிக்கும் தன்மையும் இந்த சாற்றுக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள காரம் மற்றும் உப்புத் தன்மையையும் குறைக்கும். தோலுக்கு பளபளப்பைத் தரும். பெண்கள் மாதவிடாய் தினத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் இதனை பருகினால் உதிரப்போக்கு அளவுடன் இருக்கும்.

வெள்ளரிக்காய்: புடலங்காய் சாறின் அனைத்து தன்மைகளையும் தன்னுள் கொண்டதுதான் வெள்ளரிக்காய். இதில் உள்ள சிறப்பு மூளைக்கு பலத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. கோடை காலத்தில் தோன்றும் நாவறட்சியினை போக்கும். சாறாக பருகும்போது தயாரித்த உடனே குடித்துவிட வேண்டும்.

வாழைத்தண்டு: இளம் வாழைத் தண்டினை எடுத்து நீளநீளமாக சீவி, தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்தால் சாறு ரெடி. பூவன், ஏலக்கி, கற்பூர வாழை போன்றவற்றின் தண்டுகளின் சாறே சிறந்தவை.

வாழைத்தண்டு சாறு உடலில் உள்ள கழிவை நீக்கும். உடலுக்கு நல்ல வலிமையினையும் தரும். பித்தத்தை நீக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதால் சிறுநீரகக்கல்லை கரைக்கும். காலையில் பருகுதல் நல்லது.

அறுகம்புல்: அறுகம்புல்லை சுத்தம் செய்து, பொடியாக வெட்டி, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் சாறு தயார். இதனை குடிக்க சற்று கஷ்டமாக இருந்தால் இதனுடன் தேன் சேர்த்து பருகலாம். பசியினை அதிகரிக்கும். உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியினைத் தரும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை உயர்த்தும். எனவே பழங்களை மட்டும் உண்ணாமல் காய் வகைகளில் உள்ள சத்துக்களையும் இனி நாம் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

– எம்.நிர்மலா, புதுச்சேரி.

 

Related posts

வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!

கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய வாழ்க்கையை அளிக்கும் யோகாசனம்!

சல்மான் கான்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!