தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த விவகாரம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி ெசய்த விவகாரத்தில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொழிலதிபர் பாலாஜி, வங்கி அதிகாரி வீடு என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜிக்கு கடந்த 2020ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகரன் என்பவர் அறிமுகமானார்.

அவர் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி, தொழிலதிபர் பாலாஜியிடம் போலியான ஆவணங்களை காட்டி ரூ.16 கோடி வரை பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால் கூறியபடி தொழிலை தொடங்காததால் முதலீடு செய்த ரூ.16 கோடி பணத்தை பாலாஜி திரும்பக் கேட்டபோது, அவரை தயாரிப்பாளர் ரவீந்தர் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தொழிலதிபர் பாலாஜி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சென்னை அசோக்நகர் 19வது அவென்யூ பகுதியில் வசித்து வந்த சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் ‘லிப்ரா புரோடக்‌ஷன்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து பல சினிமா படங்களை தயாரித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பணம் கொடுத்த தொழிலதிபர் பாலாஜியும் ரூ.16 கோடி பணத்திற்காக வரவு குறித்து முறையான கணக்கும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அதிக அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, இந்த வழக்கை அமலாக்கத்துறை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இதன்தொடர்ச்சியாக, சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வசித்து வரும் சென்னை அசோக் நகர் 19வது அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் அசோக் நகர் 12வது அவென்யூரில் உள்ள அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரோடக்‌ஷன்’ அலுவலகம், பணம் கொடுத்த பாலாஜியின் கொட்டிவாக்கம் வீடு, சென்னை வடபழனி மன்னார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வங்கி மேலாளர் சக்திய ஸ்ரீ சர்க்கார் வீடு என 4 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி