ரூ.14 கோடி ஜி.எஸ்.டி மோசடி பெண் தொழிலதிபர் கைது

கோவை: உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர்கள் சிலர், இல்லாத நிறுவனங்களை இருப்பதுபோல் போலியாக கணக்கு காட்டி, இ-வே பில்களை உருவாக்கி ஒன்றிய அரசின் உள்ளீட்டு வரிச்சேவையில் சலுகைகள் பெற்று, அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா போலீசில் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நொய்டா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி என நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த மாநிலங்களை சேர்ந்த 45 பேர் கடந்த சில மாதங்களில் நொய்டா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஜி.எஸ்.டி. மோசடியில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவரும், கோவையில் உலோகத் தொழிற்சாலை நடத்தி வருபவருமான சுகன்யா பிரபு (40) என்பவருக்கு தொடர்பு இருப்பதும், இவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நொய்டா போலீசார் சுகன்யா பிரபுவை கோவையில் கடந்த 22ம் கைது செய்து உத்தரபிரதேசம் அழைத்து சென்றனர். இவருடன் தொடர்புடையவர்கள் கோவையில் யாராவது உள்ளார்களா? தொடந்து ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனரா? என உ.பி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சில்லி பாயின்ட்…

3 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்