மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ்

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பணிமனைகளில் இருந்தும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (09/01/2024) பேருந்துகள் அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. காலை 6:00 மணி நிலவரப்படி 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக எந்த வித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2,749 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3092 மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2749 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது வரை 200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வழக்கமாக 57 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நேற்றிரவு கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்பட்டன எனவும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. காலை 6.45 மணி நிலவரப்படி 65% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள 82 பேருந்துகளில் தற்போது வரை 62 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 20 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு இடையூறின்றி பேருந்துகளை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள், நடத்துனர்களுடன் உரிய பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, கரூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 115 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சேலம் கோட்டத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

Related posts

சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம்: கேரள முதல்வர் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

தொடரும் யானை அட்டகாசம்; புறநகர் பகுதி பொதுமக்கள் பீதி: வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு