பஸ்சில் இருந்து குதித்து பெண் தற்கொலை கிளார்க் சஸ்பெண்ட் 3 பேர் மீது வழக்கு

திருமங்கலம்: ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கிளார்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மையிட்டான்பட்டியை சேர்ந்த கணேசன் மனைவி நாகலட்சுமி (31). 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஒன்றரை ஆண்டிற்கும் மேலாக, மையிட்டான்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் பணியை செய்து வந்தார். கலெக்டரின் உத்தரவுப்படி நேரடியாக நாகலட்சுமி பணியில் சேர்ந்ததால் மையிட்டான்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார், பஞ்சாயத்து கிளார்க் முத்து ஆகியோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த நாகலட்சுமி நேற்று முன்தினம் மதுரை வரும் வழியில் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார், பஞ்சாயத்து கிளார்க் முத்து ஆகியோர்தான் காரணம் என எழுதியிருந்தார். இதுபற்றி நாகலட்சுமியின் கணவர் கணேசன் கள்ளிக்குடி போலீசில் அளித்த புகாரில், பஞ்சாயத்து கிளார்க் முத்து, துணைத்தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார் ஆகிய மூவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக 306 பிரிவின் கீழ் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கிளார்க் முத்துவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டார். அரசு பணி வழங்க வேண்டும்: நாகலட்சுமியின் கணவர் கணேசன், நேற்று மதுரை கலெக்டர் அனீஷ் சேகரை சந்தித்து அளித்த மனுவில், ‘5 பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனக்கு அரசு பணி வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்