ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வேலைக்கு, வியாபாரம் சம்பந்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஆரணி பேரூராட்சிக்கு அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியவை கோயம்பேடு, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்து செல்கிறது.

தினமும் பேருந்துகள், கனரக வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆரணி வழியாக சென்று வருகிறது. இந்நிலையில் ஆரணி வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் பெரியபாளையம் – புதுவாயல் நெடுஞ்சாலையில் ஆரணி காவல் நிலையம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் சாலை ஓரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆரணி பேரூராட்சியில் விவசாயிகளும், நெசவாளர்களும் அதிகளவில் வசித்து வருகிறார்கள். மேலும் ஆரணியை சுற்றி போந்தவாக்கம், மங்களம், மல்லியங்குப்பம், மாதவரம், காரணி, புதுப்பாளையம், திருநிலை, அக்கரப்பாக்கம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆரணிக்கு வந்துதான் இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டும்.

இவர்கள் பேருந்துக்காக ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சாலையின் ஓரத்திலேயே நின்று காத்திருந்து பேருந்து மூலம் தங்கள் ஊருக்கு செல்லவேண்டியுள்ளது. இவர்களின் வசதிக்காக ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் கட்டுவதற்காக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இடம் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. அங்கு பேருந்து நிலையம் அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி கைவிடப்பட்டது.

மேலும் பேருந்து நிலையம் கட்டுவது குறித்து பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் அமைப்பதற்காக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் இடம் தேர்வு செய்யும் முயற்சியில் மும்முறமாக ஈடுபட்டுள்ளார். மேலும் ஆரணி பேரூராட்சி உருவாகி 125 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கவில்லை. எனவே ஆரணியில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

* ஆரணி பேரூராட்சியில் மட்டும் இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆரணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, மீஞ்சூர், நாரவாரி குப்பம் என 8 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஆரணியை தவிர மற்ற 7 பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் உள்ளது. ஆனால் ஆரணி பேரூராட்சியில் மட்டும் இதுவரை பேருந்து நிலையம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி