ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் உள்ள பஜார் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் கடைகள் முன்பு அல்லது ஓரங்களில் மாணவர்கள் நின்று ஏறி செல்கின்றனர். எனவே பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் என 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுப்புற கிராமங்களான கல்லூர் பாலவாக்கம், திருநிலை, நெல்வாய், எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டிற்கு திரும்பும்போதும் போதிய அளவில் பேருந்துகள் இல்லை. எனவே கூடுதல் பேருந்து விட வேண்டும்.

மேலும், பேருந்துகள் வர காலதாமதம் ஏற்படும்போது ஆரணி பேரூராட்சியில் உள்ள பஜார் பகுதியில் உள்ள கடைகளின் முன்பு அல்லது அதன் ஓரமாக மாணவ, மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்து நின்று எறி செல்லும் அவலநிலை உள்ளது. இதில் மழை மற்றும் வெயில் காலங்களில் அங்கு வந்து பேருந்து பிடித்து செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆரணி பேரூராட்சியில் கடந்த 125 வருடமாக பேருந்து நிலையம் இல்லாத நிலை உள்ளது. ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. மேலும், எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக பேருந்து நிறுத்தத்தில் மாணவ மாணவிகளின் நலன் கருதி பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது