பற்றி எரியும் திரிபுரா

மணிப்பூர் மாநிலத்தை தொடர்ந்து திரிபுராவிலும் வன்முறை வெடித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் அங்கு நடந்துள்ளன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. காவல் துறை வழக்கம் போல் வேடிக்கை பார்க்கிறது. 2023 மே 3ம் தேதி தொடங்கிய வன்முறை இன்று வரை மணிப்பூரில் அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டது. பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

பல அப்பாவி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர், சிறுமிகள் தற்போது படிப்பு முடக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலின் போது முகாம்களில் வாக்குச்சாவடி அமைத்து, அங்கிருந்து வாக்களிக்க வேண்டிய சூழல் மணிப்பூர் மக்களுக்கு ஏற்பட்டது. இன்று வரை பிரதமர்மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை பகிர்ந்து கொள்ள தயாரில்லை. அதே போன்ற வன்முறை இப்போது திரிபுரா மாநிலத்தில் பரவி வருகிறது. மணிப்பூர் மாநிலத்தை போல் திரிபுராவிலும் பா.ஜ ஆட்சி தான் நடக்கிறது. மாணிக்சகா முதல்வராக இருக்கிறார்.

அங்குள்ள தலாய் மாவட்டத்தில் ஜூலை 7ம் தேதி உள்ளூர் சந்தையில் ஏற்பட்ட மோதல் இருகுழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியது. இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதும், பல இடங்களில் கலவரம் வெடித்தது. அத்தனையும் காவல்துறை கண்முன்னே நடந்து முடிந்தன. இன்னும் அமைதி திரும்பவில்லை. வீடுகளை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்த மக்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை. அமைதியை ஏற்படுத்த, சமரச முயற்சிகளை மேற்கொள்ள தலாய் மாவட்டம் சென்ற சமூக நலத்துறை அமைச்சர் டிங்குராய் உள்ளிட்ட 4 பேர் குழுவை உள்ளூர் மக்கள் விரட்டியடித்துவிட்டார்கள். நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்தும் அவர்கள் ஏற்கவில்லை.

இன்னொரு புறம் மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு திரிபுராவில் காங்கிரஸ் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். அவர்களது வீடு, அலுவலகங்கள் பா.ஜவினரால் அடித்து உடைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் லாபத்திற்காக பா.ஜ அரசு சட்டம், ஒழுங்கை பராமரிக்காமல் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு திரிபுராவில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மக்களை அச்சத்திலும், பயத்திலும் வைக்க திரிபுராவை ஆளும் பா.ஜ முடிவு செய்துள்ளது.

இதுவரை நடந்த கலவரம், வன்முறை தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது அதற்கு சாட்சி. மக்களவை எம்பிக்கள் தாரிக் அன்வர், கவுரவ் கோகாய் ஆகியோரை திரிபுராவிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வரும்படி காங்கிரஸ் தலைவர் கார்கே உத்தரவிட்டுள்ளார். அதுவும் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் அங்கு பா.ஜவை வெற்றி பெற வைக்க வசதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

மணிப்பூரை தொடர்ந்து திரிபுராவையும் பதற்றத்திலேயே வைக்க பா.ஜ தலைமையிலான மாநில அரசுகள் முடிவு செய்து இருப்பது அங்கு சட்டம், ஒழுங்கு மோசம் அடைந்து இருப்பதில் இருந்து தெரிகிறது. அதே போல் டெல்லி சட்டப்பேரவை, முதல்வருக்கு எந்தவித அதிகாரமும் இல்லாமல் அங்குள்ள துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை கொடுத்து இருப்பது போல் தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கும் அதிக அதிகாரத்தை கொடுத்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளில் அதிகாரத்தை பறித்து இருக்கிறது பா.ஜ.

Related posts

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்!

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்