குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மறியல்: நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை

புழல்: சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம், கூட்டுச்சாலை பகுதியிலிருந்து பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளதால் சிறு சிறு மழை பெய்தால்கூட மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், இந்த குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த, சாலையில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் செல்லும் பொதுமக்கள் வீழ்ந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.

எனவே, இச்சாலையை உடனடியாக சரிசெய்யக் கோரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், பாமக நிர்வாகிகள் டில்லிபாபு, சுதாகர், சந்தானம், உஷா மற்றும் நிர்வாகிகள் நேற்று காலையில் ஜனபத்சத்திரம் கூட்டு சாலை பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சோழவரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்ததால் போலீஸாருக்கும், பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர், உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால், 1 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் முடிவு பெற்றது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது