நாட்டைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட் அல்ல.. பாஜக ஆட்சியைக் காப்பாற்ற போடப்பட்ட பட்ஜெட்.. திமுக செய்தி தொடர்பாளர் தாக்கு!

கடலூர்: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, திமுக சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சரவணன், மேயர் சுந்தரி ராஜா, , மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநகர செயலாளர் ராஜா, நிர்வாகிகள் பொறியாளர் சிவகுமார், தங்க ஆனந்தன், விக்ரமன் உள்ளிட்ட ஒன்றே ,நகர ,பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது; இந்த ஆர்பாட்டம் வெளிப்படையானது. நாட்டில் என்னென்ன கொடுமை நடந்துள்ளது.

தமிழக ஆளுநர் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. அது நாடு அல்ல. அதனால் அதனை தமிழகம் என மாற்ற வேண்டும் என கூறினார். ஒன்றிய அரசு தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா? இல்லையா என்ற ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் கிளப்பி உள்ளது. இதுதான் இன்றைய நிலை. நிதிநிலை அறிக்கை வழங்கும் பொழுது அனைத்து மாநிலங்களும் பயன்பெற வேண்டும். எந்த மாநிலங்களில் என்ன பிரச்சனை உள்ளது என்று காண்பது தான் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை. ஆந்திராவுக்கு நிதி வழங்குங்கள், பீகாருக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குங்கள், நாங்கள் அதற்காக ஒன்றும் சொல்லவில்லை.

ஏனென்றால் அது இந்தியாவில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தமிழக முதல்வர் கடிதம் எழுதி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்வையிட்டு சென்றார். ரூ.17,000 கோடி நிவாரணம் கேட்டு அனுப்பினால் 200 கோடி மட்டும் அனுப்புகின்றனர். பீகாரருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்கின்றனர். அதனால் மக்களை வந்து பார்த்தது பொய்யா? அல்லது மக்களை ஏமாற்றும் வேலையா.மக்களை வந்து பார்த்தால் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் வந்தீர்களா? உங்களுக்கு ஓட்டு போடவில்லை என்ற காரணத்தினால், தமிழ்நாட்டை தனி நாடாக ஆகும் முயற்சியிலே இறங்கி இருக்கிறீர்களா? என்ற கேள்வியை தான் முன்வைக்கின்றேன்.

ரூ.2000கோடி ரூபாய் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மதுரை வந்து அடிக்கல் நாட்டி செல்கிறார். அந்தப் பணி இதுவரை தொடங்கவில்லை. ஏன் என்று கேட்டால் ஜப்பானிலிருந்து நிதி வரவில்லை என கூறுகிறார். பெரிய பணக்காரர்களுக்கு ரூ.19,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்த இந்த அரசு. அதில் ரூ.2000 கோடியை இங்கு அனுப்பி இருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி இருக்கலாம். ஒரு பிரதமர் அடிக்கல் நாட்டிய மருத்துவமனைக்கு ஒரு செங்கல் மட்டும் தான் மிச்சம் உள்ளது. என்பது ஒரு பிரதமர் மாநிலத்தை எந்த அளவுக்கு ஏமாற்றுகிறார் என்பது அடையாளமாக உள்ளது என்பதனை பார்க்கலாம்.

இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்று பல மாநிலங்களுடன் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ரூ.12 ஆயிரம் கோடி வரி கொடுத்து நமக்கு கிடைக்கின்ற பணம் குறைவாகவே உள்ளது. மொத்தத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நாட்டை காப்பாற்றுவதற்காக அல்ல. ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக போடப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு