சகோதரரை களத்தில் இறக்கிவிட தயாராகும் சின்னமம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாவட்டத்தை மூன்றாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்த மாஜி மேல ரொம்பவே கோபத்துல இருக்கிறாராமே சேலத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் இலைக்கட்சியில் தற்போது மேற்கு, கிழக்கென மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுருக்கு.. மேற்கில் மா.செ.வாக மாஜி மந்திரியான பால்வளமும், கிழக்கில் செயலாளராக சூரியநிலாவானவரும் இருக்காங்க… தற்போது மெடல் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, தனது தீவிர ஆதரவாளரான மாஜி எம்எல்ஏவை 3வது மாவட்ட செயலாளராக மாற்ற சேலத்துக்காரர் முடிவு செய்திருக்கிறாராம்.. இதற்கு மாஜி பால்வளக்காரர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.. ரெண்டு மாவட்டமாக பிரித்ததிலேயே உடன்பாடில்லை. இதுல 3வதாக எதற்கு ஒருவர்னு பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை தலைமைக்கு பதிவு செய்திருக்கிறாராம்.. இந்த விவகாரத்தில் பால்வளம் மீது சேலத்துக்காரர் செம கொதிப்பில் இருக்கிறாராம்.. இது ஒருபுறமிருக்க, அண்மையில் மாவட்டத்தில் கோட்டைனு முடியும் ஊரில் சேலத்துக்காரர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாராம்.. இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், மாஜி பால்வளக்காரர் புறக்கணித்து, தனது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறாராம்.. இதனால் மெடல் மாவட்டத்தில் இலைக்கட்சி தரப்பு கலகலகத்து போய் உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அடுத்தடுத்து தோல்விகளால் அப்செட்டில் இருந்து வரும் சின்னமம்மி அவரது சகோதரரை களத்தில் இறக்க முடிவு பண்ணி திரைமறைவு வேலை நடந்துக்கிட்டு இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் இணைவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை சின்னமம்மி எடுத்தாலும் அவை அனைத்தும் எடுபடாம போச்சாம்… தொடர்ந்து தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாரு.. அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் சின்னமம்மி ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறாராம்… சரியான திட்டமிடல் இல்லாததால்தான் தொடர்ந்து சரிவு ஏற்படுவதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பியிருக்கிறாரு.. இதனால் மனுநீதி சோழன் மாவட்டத்தில் உள்ள தனது சகோதரனை தலைநகருக்கு வரசொல்லியுள்ளாராம்.. சகோதரர் மூலம் சில முக்கிய அசைமெண்ட்களை அவர் கொடுத்துள்ளாராம்.. தலைநகரில், இதற்கான வேலைகள் திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரர் அணியினரும் சின்னமம்மி சகோதரரின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியை எதிர்பார்த்து கவலையோடு இருக்கிற நிர்வாகிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு தருவதாக ஆசைகாட்டி தேசிய கட்சிக்கு ஷாக் கொடுக்க சேலத்துக்காரர் திட்டமிட்டுள்ளாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேசிய கட்சியின் ‘மலை’யான தலைவர் வெளிநாடு சென்ற நிலையில், மாநில தலைவர் பதவியை அல்வா ஊரின் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சியின் ரெண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் எதிர்பார்த்தாங்களாம்… ஆனால் கட்சித் தலைமையோ ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து மாநில தலைவர் பதவியில் கனவில் மிதந்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதனால் தேசிய கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் பலர் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. தேசிய கட்சியில் தொடர்ந்து இருந்தாலும் மாநில அளவில் தேசிய கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. மக்களவை தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லைனு ரொம்பவே கவலையோடு இருக்கிறாங்களாம்.. அதே சமயம் இலை கட்சித் தலைமை தேசிய கட்சியில் ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கியுள்ளதாம்.. ஏற்கனவே இலை கட்சியில் இருந்து விலகி தேசிய கட்சியில் இணைந்த மாஜி எம்பியை சேலத்துக்காரர் தனது முன்னிலையில் இலை கட்சியில் சேர்த்துக் கொண்டாராம்.. இதேபோல தேசிய கட்சியில் கவலையோடு இருக்கும் பலரையும் இலை கட்சியில் சேர்க்க சேலத்துக்காரர் தனது அணியை உசுப்பி விட்டுள்ளாராம்.. அவர்களிடம் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கு.. தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம்னு சொல்லி ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கி உள்ளனராம்.. இதன் மூலம் தேசிய கட்சிக்கு ஷாக் கொடுக்க சேலத்துகாரர் திட்டமிட்டு உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு படிவத்தை கொண்டு சென்றாலே பலரும் இப்போ தலைதெறிக்க ஓடுறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் தாமரை கட்சியில உறுப்பினர் சேர்க்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.. ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து கட்சியில சேர்ந்தவங்க விவரங்களே இன்னும் தெரியாத நிலையில் உள்ளார்களாம்.. இப்போ மீண்டும் புதிதாக மிஸ்டுகால் கொடுத்து கட்சியில சேர்க்க தலைமை அழைப்பு விடுத்துள்ளதாம்.. இதற்கான படிவங்கள அந்தந்த மாவட்டங்களில் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளிடம் கொடுத்து ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி முடிக்கணும்னு டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.. ஆனா புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்தாலும் வர மறுக்கிறாங்களாம்.. ஏற்கனவே கட்சியில் இருந்தவங்க எல்லாம் எம்பி தேர்தலுக்கு பிறகு எங்கே போனார்கள் என்றே தெரியவில்லையாம்.. கட்சியில இருந்தாலும் எந்த பயனும் இல்லை, யாரும் கண்டுகொள்வதே இல்லைன்னு தொண்டர்கள் மத்தியில அதிருப்தி நிலவி வருதாம்.. இந்த நேரத்தில புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு படிவம் கொண்டு சென்றால் பலரும் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறாங்களாம்.. கடந்த முறை தொடக்கத்திலேயே சேர்க்கை அள்ளியதாம்.. இந்த முறை தொடக்கமே சேர்க்கைக்கு ஆர்வமில்லையாம்.. அதுவும் ஒரு பூத்துக்கு 200 உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும்னு உத்தரவு போட்டுள்ளதால் கொடுக்கப்பட்ட படிவங்களை எல்லாம் நிர்வாகிகள் கைகளில் வைத்துக்கொண்டு என்ன செய்வதுன்னு தெரியாமல் முழித்துக்கொண்டு வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின