அக்‌ஷர்தாம் கோயிலில் மனைவியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தரிசனம்

புதுடெல்லி: அக்‌ஷர்தாம் கோயிலில் மனைவியுடன் சென்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று சாமி தரிசனம் செய்தார். ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் அவரின் மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் ரிஷி சுனக், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி ஆகியோர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அக்‌ஷர்தாம் சுவாமி நாராயணன் கோயிலுக்கு சென்றனர். கோயில் வளாகத்தில் வந்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். கோயில் வளாகத்தில் இருந்து மண்டபம் வரை இருவரும் வெறுங்காலுடன் நடந்து சென்றனர்.

கோயிலுக்குள் சென்ற ரிஷி சுனக்கும்,அக்‌ஷதாவும் சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து கோயில் நிர்வாக கமிட்டி அதிகாரி கூறுகையில்,‘‘ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்த போது இருவரும் சிறிது தூரத்துக்கு வெறுங்காலுடன் நடந்து வந்தனர். ரிஷி சுனக்கும் அவரது மனைவியும் கோயிலுக்கு வந்தது பெருமை அளிக்கிறது. மேலும் கோயில் வரலாறு மற்றும் கட்டட அமைப்பு குறித்து அவர் கேட்டறிந்தார். கோயிலில் 45 நிமிடங்கள் செலவிட்டனர்’’ என்றார்.

 

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை