நமது விவசாயத்தை அழித்தது ஆங்கிலேயர்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

கோவை: நமது விவசாயத்தை அழித்தது ஆங்கிலேயர்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி-2023 நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். ஆளுநர் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவை பார்வையிட்டு சுவைத்து மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச்செல்லும் முன் பொருளாதாரத்தை அழித்தார்கள். நமக்கு ஆதாரமாக விவசாயம் மட்டுமே இருந்தது. இந்த நிலம் விவசாய உற்பத்தியை நம்பி இருந்தது. 1800ம் ஆண்டு ஒரு ஹெக்டருக்கு 7 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்தோம். இப்போது டெல்டா பெல்ட்டில் 6 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்கிறோம். 200 வருட காலனியாதிக்கத்தில் நமது விவசாயத்தை அழித்தார்கள். விவசாயப் புரட்சியின் மூலம் இப்போது தரமான உணவுகள் கிடைக்கின்றன. இது விவசாயி மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் செய்த அதிசயம். இவ்வாறு அவர் பேசினார்.

வல்லபாய் பட்டேலுடன் மவுண்ட் பேட்டன் ஆலோசித்தார்
கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘நமது நாடு 1947ம் ஆண்டு மவுண்ட் பேட்டன் பிரபு ஆட்சி மாற்றம் குறித்து சர்தார் வல்லபாய் பட்டேலுடன் ஆலோசித்தார். அப்போது அவர் தென்னிந்தியாவை ஆட்சி செய்த சோழர்கள் ஆட்சி மாற்றத்தின்போது செங்கோலை கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வார்கள். அதன்படி ஆட்சி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்தின் உதவியுடன் செங்கோல் தயார் செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு