பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற இங்கிலாந்து தூதர்: இந்தியா கடும் கண்டனம்


புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீருக்கு இங்கிலாந்து தூதர் சென்றதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து தூதர் ஜேன் மரியட் கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் தனது டிவிட்டர் பதிவில்,’இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் 70 சதவீத மக்கள் மிர்பூரை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் நலனுக்காக இரு நாடுகளும் சேர்ந்து உழைப்பது முக்கியமாகும். அங்கு உள்ள மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்து தூதர் ஜேன் மரியட் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று அங்கு உள்ளவர்களை சந்தித்து பேசியதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இங்கிலாந்து துாதர் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றதற்கு ஒன்றிய வெளியுறவு செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான செயல் இது. இதனை ஒரு போதும் ஏற்க முடியாது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக எப்போதும் இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை