செங்கல்பட்டு அருகே தட்டி கேட்டவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதை தட்டி கேட்ட 2 பேருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவு 2 பேரை கைது செய்தனர்.

செங்கல்பட்டு அருகே மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு மனைவி வடிவுக்கரசி (32) மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில், இவரது மூத்த மகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் பைக் மோதியதில் பரிதாபமாக பலியானார். இந்நிலையில், தனது 2வது மகள் அட்சிதா மற்றும் மனைவி வடிவுக்கரசியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்கு செல்ல, ஜிஎஸ்டி சாலையை சதீஷ்குமார் கடக்க முயற்சித்துள்ளார். அதே சமயம், அவ்வழியே ஒருசிலர் ரேசில் செல்வதுபோல் பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளனர். இதில், பைக்கை ஓட்டிவந்த 2 பேர், மனைவி வடிவுக்கரசி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அடித்துக்கொண்டே உரசியபடி வேகமாக சென்றுள்ளனர்.

இந்த அதிரடி மோதலில் மனைவி வடிவுக்கரசி, 2வது மகள் அட்சிதா ஆகிய 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் அதிவேகமாக வந்த பைக்கினால்தான் எனது முதல் மகளை இழந்தேன். இப்போதும் இதேபோல் செய்கிறீர்களே என்று 2 பைக் வாலிபர்களிடம் வடிவுக்கரசி தட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வடிவுக்கரசியை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தனது சின்ன மாமனார் தமிழரசனிடம் நடந்த சம்பவங்களை சதீஷ்குமார் கூறியுள்ளார். அவர், சம்பந்தப்பட்ட 2 வாலிபர்களிடம் சென்று தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமான 2 பேரும் தமிழரசனை தகாத வார்த்தைகளில் திட்டி, கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சதீஷ்குமாரின் வலது கையிலும் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இப்புகாரின்பேரில் பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு பைக் ரேஸ் சென்றதை தட்டிக் கேட்ட 2 பேரையும் கத்தியால் குத்திய மேலச்சேரியை சேர்ந்த சர்மா (எ) சீமோன் (22), அவரது நண்பர் ஞானப்பிரகாசம் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்