காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா எஸ்.கடமங்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் செல்வராஜ். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நக்கீரன், தனது நிலத்தை அளவீடு செய்வதற்காக, ஜமாபந்தி முகாமில் மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த விஏஓ நிலத்தை அளக்க ரூ.25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி நக்கீரன் புகாரின்படி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை நேற்று கொடுத்தனுப்பினர். அதை டெய்லர் கடைக்காரர் மோகன்தாசிடம் கொடுக்குமாறு விஏஓ செல்வராஜ் கூறியுள்ளார். அதன்படி, நக்கீரன், டெய்லர் மோகன்தாசிடம் பணத்தை கொடுத்துள்ளார். அங்கு லுங்கி கட்டி மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், டெய்லரையும், விஏஓ செல்வராஜையும் கைது செய்தனர்.