லஞ்சம் வாங்கிய புகாரில் சோதனை ராமநாதபுரம் சார்பதிவாளர் வீட்டில் ரூ.12 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

*லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

பரமக்குடி : ராமநாதபுரம் சார்பதிவாளர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.12 லட்சம் பணம், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் வண்டிகார தெருவில் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக (பொ) பெத்துலெட்சுமி என்பவர் உள்ளார். இவர் பத்திரப்பதிவின்போது கூடுதலாக பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. மேலும் இந்த பணத்தை ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் ராமநாதபுரம் பேருந்து நிலையம் வரச்சொல்லி வசூலிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இடைத்தரகர்களிடம் வசூல் செய்த பணத்தை பெற்றுக்கொண்டு, பஸ்சில் ஏறி தப்ப முயன்ற சார்பதிவாளர் பெத்துலெட்சுமி மற்றும் சில அலுவலர்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களிடம் கணக்கில் காட்ட முடியாத அளவிற்கு பணம் இருந்தது. அதனை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அலுவலகம் அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அங்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1,84,500 பணத்தை கைப்பற்றினர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் பரமக்குடி புதுநகரில் உள்ள பெத்தலட்சுமி வீட்டில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 100 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 100 பவுன் நகைக்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்டதால் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. சார்பதிவாளர் பெத்துலெட்சுமியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து