மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் லஞ்ச பேரம்? கைதான அங்கித் திவாரிக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பா? பிரதமர் ஆபீசிலிருந்து நடவடிக்கை எடுக்க கூறியதாக மிரட்டல்

* உடனுக்குடன் மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தபடி இருந்தார்
* டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்
* எப்ஐஆரில் பகீர் தகவல் அம்பலம்

மதுரை: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் வெளியான முதல் தகவல் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஹர்திக் என்ற அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபு கொடுத்த புகாரின்பேரில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 பக்கத்திற்கான எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். புகார் மனுவில் டாக்டர் சுரேஷ் பாபு கூறியதாவது:

கடந்த 2018ல் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீதும், எனது மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்து, துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. கடந்த அக்.29ல் எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு பேசிய நபர், தன்னை அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி அக்.30ம் தேதி காலை 9 மணிக்கு மதுரை ஈ.டி. அலுவலகம் வரும்படி கூறினார். என்ன விசாரணை என்றதற்கு, ‘வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக பேச வேண்டும். வராவிட்டால் சம்மன் அனுப்பி, பத்திரிகை செய்தியாக வெளிவந்துவிடும்’ என்றார்.

அந்த வாட்ஸ்அப் போனில் ஹர்திக் என்ற பெயர் வந்தது. அக்.30ம் தேதி காலை மதுரையில் உள்ள ஈடி அலுவலகத்திற்கு சென்றேன். பார்வையாளர் பதிவேட்டில் எனது பெயர், செல்போன் எண் மற்றும் திண்டுக்கல் என பதிவு செய்தேன். 10 நிமிடம் கழித்து வாட்ஸ்அப் காலில் பேசிய அவர், அலுவலகத்துக்கு வெளியில் காத்திருக்குமாறு கூறினார். வெளியில் காரில் காத்திருந்தேன். எனது காருக்குள் வந்து அமர்ந்தவர், ‘உங்கள் மீது பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் வந்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தர வேண்டும். அது எனக்கு இல்லை. எனது மேல் அதிகாரிக்குத்தான்’ என்றார்.

அப்போது அவர், தனது அதிகாரிக்கு நான் கூறிய தகவலை செல்போனில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதன் பின்பு, ரூ.51 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும். நவ.1ம் தேதி தயாராக வைத்திருங்கள். நான் சொல்லும் இடத்தில் வந்து கொடுங்கள் என்றபடி ஈடி அலுவலகம் அருகில் காரிலிருந்து இறங்கிக் கொண்டார். பிறகு அக்.31 அன்று இரவும் அவர், வாட்ஸ்அப் காலில் பேசினார். பணம் தயார் என்றதும், மறுநாள் பேசுவதாக கூறினார். நவ.1 காலையில், ‘கிளம்பி விட்டீர்களா’ என வாட்ஸ்அப் காலில் பேசியவர், மறுபடியும் பேசி நத்தம் வழியாக மதுரைக்கு வருமாறும், வழியில் பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

நானும் நத்தம் தாண்டி மதுரை நான்கு வழிச்சாலையில் சென்றபோது, என் காரை நிறுத்தியவரிடம், ரூ.20 லட்சம் கொண்டு வந்திருப்பதை தெரிவித்ததும், ‘எனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். உங்கள் மீதான புகாரை முடித்து மேல் அதிகாரிகளுக்கு கடந்த அக்.31ம் தேதியே அனுப்பிவிட்டேன். அங்குதான் நிலுவையில் உள்ளது. மீதிப்பணத்தை கட்டாயம் கொடுங்கள்’ என்றவர், காரின் டிக்கியியில் பணத்தை வைக்கும்படி தெரிவித்தார். எனது ஓட்டுநர் அரவிந்த் அங்கு பணத்தை வைத்தார். இவை அனைத்தும் என் வாகன முன்பகுதி கேமராவில் பதிவாகியுள்ளது. மீதிப்பணத்தை ஒரு வாரத்திற்குள் தருமாறு கூறினார். பணம் கொடுத்ததை யாரிடமாவது தெரிவித்தால், உங்கள் மீதும், உங்கள் மனைவி மீதும் ஈடி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மிரட்டினார்.

நவ.1ம் தேதி மீண்டும் வாட்ஸ்அப் காலில் பேசிய அவர், முழு பணத்தை வாங்காமல், ஏன் இந்த பணத்தை வாங்கினீர்கள்? என்று மேல் அதிகாரிகள் திட்டுகின்றனர். மீதிப்பணம் நவ.8ல் தருமாறு கறாராக கூறிவிட்டார். நவ.8ம் தேதி பேசியவரிடம், எனது மருத்துவமனை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் செலவிருப்பதால் பணத்தை தயார்ப்படுத்த முடியவில்லை என்றேன். அன்றிரவு கண்டிப்பாக பேசியவரிடம், ரூ.20 லட்சத்தை முதலில் தருவதாக கூறி, நவ.15ல் பணம் தர ஒத்துக்கொண்டேன். நவ.14ல் பணம் தயார் என மெசேஜ் அனுப்பினேன்.

அன்று நள்ளிரவில் பேசியவர், காய்ச்சலாக இருப்பதால் நீங்கள் வைத்திருங்கள் எனக்கூறி விட்டார். நவ.21ம் தேதி வாட்ஸ்அப் காலில் பேசியவர், வேறு முக்கிய பணியாக சென்னைக்கும், டெல்லிக்கும் சென்று வந்ததாகவும், பணத்தை விரைவில் பெறுவதாகவும் கூறியவரிடம், ‘நீங்கள் மாறுதலில் சென்றுவிட்டீர்களா’ எனக் கேட்டேன். ‘காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணியில் இருக்கிறேன்’ என்றார். ‘ஏதாவது குறைக்க முடியுமா’ என்று நான் கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பே இல்லை எனச் சொல்லி விட்டார். ‘பணத்தை என்னால் நீண்டநாள் கையில் வைத்திருக்க முடியாது’ என கூறியதற்கு, ‘உங்களுக்கு ஹவாலா பணம் பரிமாற்றம் செய்பவர்கள் யாரும் தெரியாதா’ எனக் கேட்டார்.

‘எனக்கு அவர்களைப் பற்றியெல்லாம் தெரியாது’ என்றேன். பின்னர், திண்டுக்கல் வழியாக வரும்போது பணத்தை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். நவ.30ம் தேதி இரவு வாட்ஸ்அப்பில் பணம் தயாரா? எனக் குறுஞ்செய்தி அனுப்பி, ‘டிச.1 காலை 6 மணிக்கு வரமுடியுமா’ என்றார். அதன்பிறகே டிரைவருடன் சென்று கொடுக்க ஒத்துக் கொண்டேன். என்னிடம் லஞ்சம் கேட்டு அச்சுறுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதை அப்படியே லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். மேலும் அதில் அமலாக்கத்துறை அதிகாரி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7(ஏ) 1998 மற்றும் திருத்தச் சட்டம் 2018 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகே அங்கித் திவாரியை கைது செய்துள்ளனர்.

Related posts

சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமி கைது

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்